அருவுரு விருவே றருநிலை கருவே
கருமிட றுறவே கடுவிட மறவே
சிரமலர் நிலவே திருநதி யரவே
தருநிழற் குருவே தனையளி தருவே
#கலிவிருத்தம்
சீர் பிரித்து
அரு உரு இரு வேறு அரு நிலை கருவே
கரு மிடறு உறவே கடு விடம் அறவே
சிரம் மலர் நிலவே திரு நதி அரவே
தரு நிழல் குருவே தனை அளி தருவே
பொருள்
அரு உரு என்று இரு அரும் நிலைகளிலும் உள்ள கருப்பொருளே, கடு விடமானது அற்றுப் போக நீ உன் மிடற்றைக் கருமையாக மாற்றினாய், உன் சிரத்தில் மலர், நிலவு , கங்கை மற்றும் பாம்பைப் புனைவாய் , கல்லால் மரத்து நிழலில் தக்ஷிணா மூர்த்தியாக உபதேசம் செய்த நீ, அடியர்கள் என்ன வேண்டினாலும் கொடுப்பாய் , உன்னதமாக உன்னையே வேண்டும் அடியர்களுக்கு நீ உன்னையே அளிப்பாயன்றோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக