செவ்வாய், 19 நவம்பர், 2024

கடம்பனருளால் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

கடம்ப னருளாற் றடங்க லகலு
மடங்காத நாவு மடங்கும் -கிடந்துருளுந்
தூசு மிளிர்பொன்னாஞ் சூழ்ந்த வினையெரியு
மேசுங் கவியாமே தேசு

#வெண்பா

 

 சீர் பிரித்து:-

கடம்பன் அருளால் தடங்கல் அகலும்

மடங்காத நாவும் மடங்கும் - கிடந்து உருளும்

தூசும் மிளிர் பொன்னாம் சூழ்ந்த வினை எரியும்

ஏசும் கவி ஆமே தேசு

 

இரண்டாம் அடியை அடங்காத நாவும் அடங்கும் என்றும் பிரிக்கலாம்

 

பொருள்:-

கடம்பன் அருள் கைப்பெற்றால், தடங்கல்கள் அகன்று போகும், நாவன்மை ஏற்படும், ஒழுங்காக மடங்கி தமிழுச்சரிப்புச் சீராகும் , உலக விஷயங்களில் பேசித் திளைக்கும் நாவானது பகவத் விஷயத்தில் பேசும் அடக்கத்தைப் பெறும் , மண்ணில் கிடந்து உருளக்கூடிய தூசினைப் போல் ஒரு மதிப்பற்ற பொருள் கூட மிளிரும் பொன்னாக மாறும், நம்மை சூழ்ந்திருக்கும் வினை (அதனால் ஏற்படும் விளைவுகள்) எரியும் தூசாய்! இவ்வளவு நடக்க , ஏசுச் சொற்கள் கூட தேசமுடைய கவியாய் மாறாதா என்ன! (ஏசும் தேசு கவி ஆமே!)


No photo description available.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...