நித்த னுன்னை நேடி வந்து நீளு துன்ப மாய்த்திடச்
சத்த மிக்கு னாம மேத்து மன்பர் நாவின் சாட்சியா
பத்தி னிக்கு மேன்மை தந்த பார்ம கட்கு நாதனாம்
பத்த னுக்கு வெளியி னின்ற பாண்டு ரங்க விட்டலே
பத்தினிக்கு மேன்மை தந்த பார் மகளுக்கு நாதன் ஆம் - தனது பத்தினியான பூமி பிராட்டிக்கு மேன்மை தந்த தலைவனான திருமால், இவ்விடத்தில் கண்ணாவதாரத்தில் சத்யபாமாவிற்கு அளித்த மேன்மை கோரப் படுகிறது(பூபாரம் குறைக்கத் தானே பாரதத்தையே நீ அரங்கேற்றினாய்!)
பத்தனுக்கு வெளியில் நின்ற பாண்டு ரங்க விட்டலே - தன் பத்தன் சொல்லைக் கேட்டு உருப்பிணி நங்கையுடன் வீட்டிற்கு வெளியே நின்ற பொறுமைசாலியும் மிக்க கருணை கொண்டவனும் நீ அன்றோ விட்டலா
நித்தன் உன்னை நேடி வந்து- என்றும் இருப்பவனான நின்னைத் தேடி வந்து
நீளு துன்பம் மாய்த்திட- தமது பல வாழ்வின் தொடரும் வினையைத் தொலைக்கும் பொருட்டு
சத்தம் மிக்கு உன் நாமம் ஏத்தும் அன்பர் - பெருங்குரலில் பத்திப் பெருக்குடன் நினது நாமத்தைப் போற்றி உரைக்கும் அடியர்தம்
நாவின் சாட்சியா- நாவின்/ மொழியின் சாட்சியாக நீ அவ்விடம் உறைகிறாய் அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக