ஒருத்தி மகனெனச் சிறைதனிற் பிறந்துபின் னொளிவா
யொருத்தி மகனென மறுகரை வளர்ந்தனல் லொளியை
யிருத்தி மனத்தினி லிசைமிகு மின்றமி ழேத்தக்
கருத்திற் றுளிர்விடு மறிவொடு கனிவெனு முயர்வே
ஒருத்தி மகன் என சிறை தனில் பிறந்து - தேவகியின் மகனாய் கஞ்சன் அடைத்து வைத்த சிறைதன்னில் பிறந்து
பின் ஒளிவாய் ஒருத்தி மகன் என மறு கரை வளர்ந்த நல் ஒளியை- அதன் பின்னர் யமுனையின் மறு கரையில் ஒளிவாய் அசோதையின் மகன் என வளர்ந்த நல்ல ஒளியைப் போன்ற கண்ணனை மனத்தினில் இருத்தி இசை மிகும் இன் தமிழ் ஏத்த - மனதினில் வைத்து இசை ததும்பும் இனிய தமிழ்ப்பாடல்களால் போற்ற
கருத்தில் துளிர்விடும் அறிவொடு கனிவு எனும் உயர்வே- கருத்தில் உதிக்குமாம் உயர்வான அறிவும்(ஞானமும்)கனிவும்(பத்தியும்) ஒருசேர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக