சிற்பமே செம்பொற் சிலையே
செந்தமிழ் செப்புஞ் சுவையே
பொற்பதங் காண்பித் தருளே
புலவர்கட் கெல்லா மரசே
கற்பினால் வானோர் பிடியுங்
களவினாற் கானின் பிடியும்
பொற்புட னேற்று நின்றாய்
புன்னகைத் தாளு மமிழ்தே
சிற்பமே செம் பொன் சிலையே- சிற்பக்கலையிற் சிறந்து விளங்கும் சிற்பமாகவும், செம் பொன்னால் வடித்த சிலைகளில் சிறந்த வடிவாகவும் இருப்பவனே;செம் தமிழ் செப்பும் சுவையே- செந்தமிழின் இனிமையான சொற்களின் சுவையாக விளங்குபவனே; புலவர்கட்கு எல்லாம் அரசே- சங்கத் தமிழ் அவையைத் தலைமை ஏற்ற தமிழ்க் கடவுளே, அகத்தியருக்குத் தமிழ் கற்பித்த ஆசானே!; கற்பினால் வானோர் பிடியும் களவினால் கானின் பிடியும் பொற்பு உடன் ஏற்று நின்றாய்; தமிழ் மரபின் உள்ள இரு வகையான திருமணங்களை நீயே காண்பிக்கக் கற்பு மணத்தில் இந்திரன் மகளான தெய்வானையையும், களவு மணத்தால் வள்ளியையும் அழகுடன் ஏற்று நின்றவனே; புன்னகைத்து ஆளும் அமிழ்தே- மிக்க போர் வல்லமை கொண்டவன் என்றாலும் நீ புன்னகையைக் கொண்டே உனது அன்பர்களை ஆளும் அமுதம் போன்றவன்; பொற்பதம் காண்பித்து அருளே- உனது பொன் போன்ற திருவடிகளைக் காண்பித்து எம்மை அருள்வாயாக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக