வியாழன், 25 ஜூன், 2026

திருமண வாழ்த்துப் பாடல்


அறம்சார்ந்த இல்வாழ்வில் அணிசேர விழைவோராய்

அகம்சார்ந்த உச்சம்பல அடைவோராய்

 

நிறமாறாப் பண்புபற்றி நல்லவையோ அல்லவையோ

நிலைமாறா துடனெதிர்கொள்  நல்லோராய்

 

துறைசார்ந்த உயர்வெட்டித் திருவிலகா அருள்வளரத்

துணிவுடனே வருங்காலம் தழைப்போராய்

 

முறைசேர்ந்த தம்பதிகள் மூவுலகும் புகழ்பாட

மொழிசேர்ந்த பொருள்போல வாழியவே

அறம் சார்ந்த இல் வாழ்வில் அணி சேர விழைவோராய் - அறம் என்னும் அடிப்படையை முற்றிலும் சார்ந்த இணைய விருப்பம் உள்ளவராய் 

அகம் சார்ந்த உச்சம் பல அடைவோராய் - அகத்துறையிலும் அன்பினால் உச்சம் பல அடைய இருப்பவராய் 

நிறம் மாறா பண்பு பற்றி- ஸ்திரமாக என்றும் ஒரே கொள்கையின் பிடிப்பைப் பற்றி

நல்லவையோ அல்லவையோ - நல்லது வந்தாலும் தீயது வந்தாலும்

நிலை மாறாது எதிர்கொள் நல்லோராய் - அது தத்தமது நிலையில் எந்த வித சலனமும் ஏற்படுத்தாத வாறு வருவதை எதிர்கொள்ளும் நல்ல பண்பினராக 

துறைசார்ந்த உயர்வு எட்டி - தமது பணியிலோ அல்லது தேர்ந்தெடுத்த துறையிலோ உயர் நிலை எய்தி 

திரு விலகா அருள் வளர- செல்வம் என்றும் விலகாதவாறு இறையருள் நிறைய 

துணிவுடனே வரும் காலம் தழைப்போராய் - வரும் காலத்தில் துணிவுடன் எதிர்கொண்டு குடும்பம் தழைத்தோங்கும் படி

முறை சேர்ந்த தம்பதிகள் - கற்பு மணத்தில் இணைந்த மணமக்கள்

மூ உலகும் புகழ் பாட - மூன்று உலகங்களும் தமது புகழைப் பாடும் படி கோலோச்சி 

மொழி சேர்ந்த பொருள் போல் வாழியவே- சொல்லும் பொருளும் போல் பிரியாதவாறு இணைந்தே வாழ்க 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமண வாழ்த்துப் பாடல்

அறம்சார்ந்த இல்வாழ்வில் அணிசேர விழைவோராய் அகம்சார்ந்த உச்சம்பல அடைவோராய்   நிறமாறாப் பண்புபற்றி நல்லவையோ அல்லவையோ நிலைமாறா துடனெதிர்கொள்  நல...