வெள்ளி, 24 ஜூலை, 2026

மங்கை எழுசீர் விருத்தம் (சந்தம் முற்றுமோனை)

மங்கை மார்பகம் வாகு வாய்சுனை 

      வந்த வாதரும் வால்விழி 

செங்கை சீர்வளை தேடு சிற்றிடை 

      திங்க டேர்முகஞ் செவ்விதழ் 

தொங்கு தூகுழ றுஞ்சு சோர்வழி 

       தொய்வில் சுந்தரத் தோள்களுந்

தங்கு தாழ்மனஞ் சங்கு சக்கர 

     சார்ங்கன் றாளிணை சாருமே  

 மங்கை மார்பகம் -  மங்கையினது மார்பகத்திலும் 

வாகு வாய்சுனை - அவளது அழகு மிகுந்த சுனை போன்ற வாயிலும் 

வந்து அவா தரும் வால் விழி - தானாகவே வந்து பார்ப்பவர்கள் கண்ணில் ஆசையை ஊட்டும் ஒளி பொருந்திய அவள் விழியிலும்

செம் கை சீர் வளை - சீரான வளையள் அணிந்த செம்மையான கைகளிலும் 

தேடு சில் இடை - தேடும்படியாக உள்ள சின்ன இடையிலும் 

திங்கள் தேர் முகம் - சந்திரன் போன்ற தேர்ந்த முக அமைப்பிலும் 

செ இதழ் - சிவந்த நிற இதழ்களிலும் 

தொங்கு தூ குழல் - நீளம் மற்றும் தூய்மை பொருந்திய தொங்கும் படியான உள்ள முடியிலும் 

துஞ்சு சோர்வு அழி - தூக்கத்தையும் சோர்வையும் அழிக்க வல்ல 

தொய்வு இல் சுந்தர தோள்களும் - தளர்ச்சி அடையாத அழகிய தோள்களிலும் 

தங்கு தாழ் மனம் - சிந்தையின் ஊடு என்றும் தங்கிக் கொண்டு இருக்கின்ற எனது தாழ்வான மனமானது 

சங்கு சக்கர சார்ங்கன் - சங்கு சக்கரமும் சார்ங்கம் என்னும் வில்லும் ஏந்திய திருமாலின் 

தாளிணை சாருமே  - இரு திருவடிகளை சார்ந்து உய்வு பெறுமோ?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மங்கை எழுசீர் விருத்தம் (சந்தம் முற்றுமோனை)

மங்கை மார்பகம் வாகு வாய்சுனை        வந்த வாதரும் வால்விழி  செங்கை சீர்வளை தேடு சிற்றிடை        திங்க டேர்முகஞ் செவ்விதழ்  தொங்கு தூகுழ றுஞ்ச...