செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

நினையொழிந்த எண்சீர் விருத்தம்

 நினையொழிந்த நேரமெலா மிருளாய் நீள 

      நிலைகுலைந்த நெஞ்சமதின் வலியு மோங்கச்

சுனையொழிந்த கயலினம்போல் சோர்வி லாழச் 

     சுயமிழந்து தத்தளிக்குஞ் சோக மூள 

வனையொழிந்த சேயினைப்போற் றிக்கற் றோட 

       வறிவிழந்து சுற்றுநிலை படிமீ தேனோ 

வெனையொழிந்து கரையுநிலை யுன்னி லென்றோ 

       விடையொழிந்த வள்ளியமை சேருங் கோவே 

நி(ன்)னை ஒழிந்த நேரம் எல்லாம் இருளாய் நீள - உன்னை விட்டுப் பிரிந்த நேரம் எல்லாம் இருள் சூழ்ந்த இரவாய் நீண்டு கொண்டே போக 

நிலை குலைந்த நெஞ்சம் அதின் வலியும் ஓங்க - நிலை குலைந்து போன நெஞ்சத்தின் வலியானது ஓங்க 

சுனை ஒழிந்த கயல் இனம் போல் சோர்வில் ஆழ - சுனை நீரினின்று விலகிய மீன்களைப் போன்று சோர்வில் ஆழ்ந்து போகும் படியாக 

சுயம் இழந்து தத்தளிக்கும் சோகம் மூள - தனது சுயத்தை இழந்து தத்தளிக்கும் சோகமானது மூளும் படியாக 

அ(ன்)னை ஒழிந்த சேயினை போல் திக்கு அற்று ஓட- அன்னையை விட்டு விலகிய குழந்தையைப் போன்று திக்குத் தெரியாமல் திரிய 

அறிவு இழந்து சுற்று நிலை படி மீது ஏனோ - அறிவை இழந்து சுற்றும் நிலை இவ்வுலகின் மீது (எமக்கு ஏனோ)

எ(ன்)னை ஒழிந்து உன்னில் கரையும் நிலை என்றோ- யான் என்னும் கருத்து ஒழிந்து உன்னில் கரையும் நிலை என்று கிட்டுமோ

இடை ஒழிந்த வள்ளி அம்மை சேரும் கோவே - இடை இல்லாதபடி காட்சி தரும் வள்ளி அம்மை நாதனே முருகனே !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துண்ட வெண் பிறையன் கலித்துறை

துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னென்று மண்ட மண்ணுல கந்தனைக் காப்பவ னாசை கொண்ட பெண்ணுயிர் கண்மனத் தேற்பவன் கோலங் கண்ட வந்நொடி யேகவி கள்பிற...