திங்கள், 9 பிப்ரவரி, 2026

பகலவன் ஆக்கம் மடக்கு வெண்பா

பகலவ னாக்கம் பழுதிலி பார்வை 

புகலவ னாக்கம் புரைதீ - ரிகலவன்

வீழ விராமனு மேத்தவமர் வென்றியருள்  

வீழ விராமனு மாசு 




இகலவன் வீழ - பகைவனான இராவணன் போரில் தோல்வியுற 

இராமனும் ஏத்த- பரம்பொருளான இராம பிரானே ஏத்த (ஆதித்திய இருதயம் என்னும் பாவை) 

அமர் வென்றி அருள் - போரினில் வெற்றியை அருளும் 

பகலவன் ஆக்கம்  - கதிரவனின் ஆக்கம் 

பழுதிலி பார்வை - புறப் பார்வை குற்றமற்று விளங்கச் செய்தல் 

இரா மன்னும் ஆசு வீழ  - இரவு போன்ற இருள் தங்கி இருக்கும் குற்றம் விட்டு விலக, இது அகத்திருளையும் விலக்குவதைக் குறிக்கின்றது 

புகல் அவன் புரை தீர் ஆக்கம் - அக்கதிரவனின் அனைத்துக் குற்றங்களையும் நீக்கும் ஆக்கத்தைக் கூறுவோமாக 


பகைவனான இராவணனைப் போரின் கண் வெல்ல பரம்பொருளான இராமனே ஏத்திய கதிரவனின் ஆக்கமானது பார்வையைக் குற்றமறச் செய்தல், நிலைத்து  நிற்கும் இராப் போன்ற இருள்சேர் குற்றங்கள் நம்மிடமிருந்து விலக, அக்கதிரவனின் குற்றம் நீக்கும் ஆக்கத்தை நாமும் ஏத்துவோமாக 

உம்மை- சிறப்பு 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரைதேடி எண்சீர் மண்டிலம்

  இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற        வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள்            குறைவில்லை...