வெள்ளி, 31 மே, 2024

திருவோடு சிலேடை வெண்பா

திருவோ டுறையுந் திருவே திருவா
மிரவோ டுறையு மிருளா - யரவோ
டரளு மருளே யருளா மருளே
கரவோ டருளு மருள்     

வியாழன், 30 மே, 2024

பழனியாண்டவன் கலிவிருத்தம்

கோலமர்ந்து கோளகற்று(ங்) கோலவாசு கிளியுடை
ஆலமர்ந்த மௌனநாத னாசிபெற்ற குருபரன் 
ஞாலமேழு முண்டுமிழ்ந்த ஞானபால னினைமகிழ்
பாலவேல ஞானநாத னீடுவாழும் பழனியே

கலி விருத்தம் 

புதன், 29 மே, 2024

மாருதி வெண்பா

 

தன்னிறைவிற் சான்றோனாந் தாசரதி தாசனுய
ரின்னுரைக்கு மீடி லிலக்கணத்தான் - மன்னனுடன்
மாவிணங்க வாயுவழி வானுயர்ந்த மாருதி
தீவிலங்கத் தீவைத்தான் றேர்ந்து
 

வைகுந்தன் வெண்பா

 

கூடேறி நின்று குவலயத்தே வாழ்வெடுத்
தீடேறி யென்று வினையறுமோ - வீடேற
வைகுந்தன் றாள்பற்றி வையகத்தை விட்டொழியச்
செய்கின்ற சேவைசெயச் செய்
 

முற்றெதுகை மாருதி விருத்தம்

 

தற்பொலிரும் விற்புருவச் சிற்பமென கற்புமக
ணற்கணவன் விற்பொருனன் சொற்பணியுந் தற்கிளைய
னிற்பதற்குப் பொற்புடைய வெற்பெடுத்துச் சொற்பரனு
நற்பணியாய்த் தற்கரத்திற் கற்சுமந்தா னற்புதமே

கண்ணன் பாதம் விருத்தம்

 கள்ளச் சகட முதைக்க கவீனங் களவாட வேற வெள்ளத் தரவின் றலைமேல் விகடக் கூத்துப் புரிய மெள்ளத் துயிலும் பொழுது வேடன் கணையை யேற்க வுள்ளத் துறையு முயிரே வுன்னைக் காக்கு முத்தே

அறுசீர் விருத்தம் 

செவ்வாய், 28 மே, 2024

காதலர் காலாமே கால்

காலற்குக் காலனுங் காதலுற கைபேசி மாலுற் றுழல்வனோ மாமாயன் மாலுற்ற மாதர்தங் கோவே மயங்கினான் மானுடக் காதலர் காலாமே கால்

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...