வியாழன், 12 ஜூன், 2025

என்றுமாய்கை கலிவிருத்தம்

என்றுமாய்கை யென்றவுண்மை யாரறிந்த ரகசியம்
வென்றிவாழ்வி னோக்கமென்று வீணடைந்த வெறுமையா
மன்றிலாடு நாதர்பாத மம்மைபாதந் தொழுவதே
நன்றுவாழ வாறதென்றன் குன்றிலாடுங் கந்தனே

 

செவ்வாய், 10 ஜூன், 2025

மண்ணீந்தாய் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

மண்ணீந்தாய் நின்கோவில் செய்ய 

        மதியீந்தாய் நின்னாம முள்ள 

              மலரீந்தாய் நின்பூசை செய்யக்


கண்ணீந்தாய் நின்னுருவைக் கொள்ளக் 

       கனியீந்தாய் நின்னன்பா யுண்ணக் 

           கதியீந்தாய் நின்னன்பர்க் கெல்லாந்


தண்ணீந்தாய் நின்னருளா யாடத் 

      தகைவீந்தாய்த் தனித்தமிழிற் பாடத் 

            தடையீந்தாய் நின்சரணை நாட
 

விண்ணீந்தாய்த் தேவர்க்கு வேலா 

      விதியீந்தாய் நின்புகழைப் பாட 

           விழைவேனோ நீயிருக்க வேறே 

 

சீர்பிரித்து:-

மண் ஈந்தாய் நின் கோவில் செய்ய

மதி ஈந்தாய் நின் நாமம் உள்ள

மலர் ஈந்தாய் நின் பூசை செய்ய

கண் ஈந்தாய் நின் உருவைக் கொள்ள

கனி ஈந்தாய் நின் அன்பாய் உண்ண

கதி ஈந்தாய் நின்அன்பர்க்கு எல்லாம்     

தண் ஈந்தாய் நின் அருளாய் ஆட

தகைவு ஈந்தாய் தனித்தமிழில் பாட

தடை ஈந்தாய் நின் சரணை நாட

விண் ஈந்தாய் தேவர்க்கு வேலா!

விதி ஈந்தாய் நின் புகழைப் பாட

விழைவேனோ நீ இருக்க வேறே?             

                             

படம்

மழலை விருத்தம்


மழலையாளு முறுவலாழ மறைந்துபோகுஞ் சோகமாய்
      மனதைவாட்டு மிடர்கள்யாவு மாய்ந்துபோக நின்றிடு

நிழலிலாத வெயிலில்வாடு நிலையிலாத பயணிக
      ணிகரிலாத சுனையைநாடி நிறைவடையு மாறுபோ

றொழிலில்வாடுந் துணிவில்வாடு மகவில்வாடு மாந்தர்க 
       டுரிதமீண்டு நிலையைநாட வழியமைக்கு மாறதாய்ப்

பொழில்கள்சூழ்ந்த பூவின்பாறை புன்னகைத்து வாழ்ந்திடுங்
         குழந்தைவேலன் காத்திருக்கக் குறைகளேது நாடுமோ

 

புதன், 4 ஜூன், 2025

வாழ்ந்திறந்து கலிவிருத்தம்

 வாழ்ந்திறந்து மீண்டுமீண்டு வாழ்விலுற்ற பயனுமென்

வீழ்ந்தெழுந்து முனைவுழன்று விதைவிளைந்த வேடமென்

சூழ்ந்திருந்த வினையகற்றித் தூயவீட்டை நாடவே

தாழ்ந்திருந்து பகவன்றாளைத் தலையமர்த்தக் கேண்மினே           

 

செவ்வாய், 3 ஜூன், 2025

சீர் மல்கு வெண்பா

சீர்மல் கழகுருவே தீரா விளவுருவே நீர்மல்கி நின்னை நினைந்துருகச் - சூர்மங்க வேலெறிந்த கோலமயின் மீதமர்ந்த செவ்வேளே மாலமர்ந்த மாந்தர்க்கு நல்கு

 

செவ்வாயிற் செவ்வேள் கலிவிருத்தம்

தோற்றமில்லை முடிவுமில்லை சோதியான தத்துவ
மாற்றமில்லை தோல்வியில்லை மாசிலாத வேலவ
வேற்றமில்லை யென்றுமில்லை யேத்திடாது நின்னையே
கூற்றுமில்லை குறையுமில்லை போற்றுவார்க ணென்றுமே

 

சனி, 31 மே, 2025

மாயனே வெண்பா

மாயனே யென்மனத்தி னாயக னென்றெண்ண
மாயனே நன்கு வழிகாட்டி - மாயனே
யாவுமாய் நின்றா னெனவுணரப் பேறுற்றாற்
பாவமோ பாருடைத்த பற்று

 

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...