செவ்வாய், 20 ஜனவரி, 2026

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் 

பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும்

பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம்

பழுதே துதியாத் திதி 


ஞாயிறு, 18 ஜனவரி, 2026

செவ்வாய், 13 ஜனவரி, 2026

அளவில் அழகின் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 அளவி லழகின் மறுபேர் முருகன் 

றொளைவேன் மலைமா துகள்செ யொருவன்

வளைவில் லிராமன் வழுத்து மருகன் 

விளைப்பான் விதிக்கும் விதி 


மாவாய் ஆசிரியப்பா

மாவாய் பிளந்த மூவா முகுந்தனை 

யேவா நகைத்து முப்புர மெரித்தா 

னஞ்சடர் மிடற்றமு தாக்கு நங்கை

பஞ்சுக் கரமணை பாங்குசெய் வேலன் 

களவிற் குறத்தி கைத்தலம் பற்றக் 

களிற்றுரு வெடுத்த வெள்ளெயிற் றொருவ

னளவற்ற வாற்றலைச் செப்ப 

வான்றோர் மொழியி னகலமுந் துகளே 


செவ்வாய், 6 ஜனவரி, 2026

பரங்குன்ற செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

 பரங்குன்ற நீயே பரம்பொருளே வேளே

மரமொன்றிற் றீப மலர - வரந்தந்து
காத்தாய் வடிவேலா கார்மயில் வாகனா
வேத்தவுனை யேற்றதின மின்று

திங்கள், 5 ஜனவரி, 2026

மார்கழி -14

நாவுடையார் நின்றேத்து நாயகனை யென்றென்றுஞ்

சாவறியா ருள்ளுள்ளுஞ் சர்ப்ப சயனனை 

மாவலிபால் யாசித்த மாணியை மாவடிவை 

யாவர்க்கு மாதியை யாண்டுமுறை மூலத்தை 

நோவறியா  நுங்கட்கு வீடளித் தாள்வானைப்  

பாவடிவிற் பாங்குரைத்த பல்லுயுரு முய்யவவன் 

சேவடிசேர் சீர்வழியைச் செப்பலுற்ற கோதைபுகழ்

நாவளர நாட்டு நயந்தேலோ ரெம்பாவாய்


ஞாயிறு, 4 ஜனவரி, 2026

வேதாந்தம் வெண்பா

 வேதாந்தம் பேசி வினையொழிப்பீ ரஃதென்றுந் 

தூதாண்ட விட்டுணுவைத் தூமலரா - ணாதனை

வில்விசயன் சாரதியை வையத் துசாவெனவே 

சொல்லிசைத் தேத்தலொப்போ சொல்


வெள்ளி, 2 ஜனவரி, 2026

மார்கழி- 13

புள்ளின் முகமுடைத்தான் புள்ளின் கொடியுடைத்தான் 

புள்ளி வடிவெடுத்துப் புங்க மறையுரைத்தான் 

புள்ளி னிறுதிவினை போற்றிச் சுயம்புரிந்தான் 

புள்ளின் விழியறுத்தான் பூட்டு சகடுதைத்தான் 

வள்ளற் குணமுடைத்தான் வாழ்த்தித் தமிழ்மாலை

துள்ளு மிசைவடிவிற் றுங்க புதுவைமகள்

உள்ளத் துயர்வெண்ணி யூட்டு திருவருளை 

யள்ளி யருந்து விழைந்தேலோ ரெம்பாவாய்   

நாதவிந்து விருத்தம்

 நாதவிந்து ஞானரூப நாகவெற்ப பாரதச்

சூதுவென்ற துட்டர்நூறத் தேர்நடத்து மாதவன்

மாதுபெற்ற மான்மணக்க கிழவனான குமரநின்

பாதமுற்ற வேடுகற்க வெத்தவத்தை யாள்வதே 


மலையுயர்த்தி விருத்தம்

மலையுயர்த்தி மழைதடுத்த மாயவாய னுறுதியும்

சிலைவளைத்துக் கரம்பிடித்த சீதைகேள்வ னுறுதியும்

தொலைநிலத்தை நிலைநிறுத்து சூகரன்ற னுறுதியும்

நிலைநிறுத்தி நினைவகற்ற நித்தமுத்தி சித்தியே 


வியாழன், 1 ஜனவரி, 2026

மயங்கிநின்று விருத்தம் (பிரயோகச் சக்கரம்)

 மயங்கிநின்று வாழ்வினின் மனந்துவண்டு போகலாம்

தயங்கிநின்று நாதனை மறந்துகூட போகலாம்

பயங்கொளாது பத்தனின் பதைப்பிரிந்து மீளவே

இயங்குசக்க ரத்தினான் இமைத்திடாது காப்பனே

மார்கழி-12

 ஆணவத்தை விட்டொழித்த வானைதனைக் காத்தானைத் 

தூணுதித்துத் தூய சிறுவனைக் காத்தானைக் 

காணவந்த நட்பவலைக் கண்ணமுதாய்க் கொண்டானை 

மாணியாக வந்துலகின் மூன்று மளந்தானை 

நாணொழிந்து நம்பிவந்த ஆயர்த நாயகனைப்  

பூணொழிந்து நோன்புற்ற பூமாலை சூடியிவள் 

வாணிமகிழ் தேனோசை வஞ்சி தமிழ்ப்பாவை

தோணியென பற்றிச் சுகித்தேலோ ரெம்பாவாய்


விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி