புதன், 9 அக்டோபர், 2024

அம்பிறங்கி கலி விருத்தம்

அம்பிறங்கி யானைராச னங்ககவ்வு முதலையை
யம்புறங்கு வாதிதேவ ரங்குசென்ற வக்கணந்
தம்பிறங்கு நேமிகொண்டு தத்தவேவு கருணையை
யம்பரும்ப ரிம்பரென்று நின்றுபோற்றி மகிழ்வரே   
#கலிவிருத்தம்

செவ்வாய், 8 அக்டோபர், 2024

அறிவால் வெண்பா செவ்வாயிற் செவ்வேள்

அறிவா லறிந்து னடியை யடைய
நெறிவா யரிதே யறிவோங்  -  குறையா
துணர்வா லுனையே வணங்க வருள்வாய்க்
கணவேந் திளையா கனிந்து  

கந்தனம்மை கலிவிருத்தம் (ஏகபாதம்)

கந்தனம்மைக் காக்கவெம்மை கட்டமேது மொட்டுமோ
கந்தனம்மை காக்கவெம்மை கட்டமேது மொட்டுமோ
கந்தனம்மைக் காக்கவெம்மை கட்டமேது மொட்டுமோ
கந்தனம்மை காக்கவெம்மை கட்டமேது மொட்டுமோ
#கலிவிருத்தம்

திங்கள், 7 அக்டோபர், 2024

மந்திபாயும் கலி விருத்தம் (ஸ்கந்த மாதா)

மந்திபாயு சோலைசூழு மின்னுதங்க வெற்புறை
யிந்துசூடு நாதர்பாக மேற்றுவந்த தேவிநீ
கந்தனம்மை யென்றுநின்ற காட்சிகாண விற்றைநாண்
மைந்தரெம்மை வைத்தமைக்கு வாழ்வனைத்து நன்றியே

மேதினி வெண்பா

 மேதினி மாதணி கோதிலி காதணி
யாதினி நோக்கவு மெண்ணமெலாம் - வாதினிற்
சூரனை வென்றவன் தோற்றிய தொன்மொழிக்க
ணேரடிச் செல்லு நெகிழ்ந்து

குறள் வெண்பா

தாதை யெழுது தலையெழுத்தை மாற்றவல
காதை புனைவோம் கவி

எல்லா வணியு மணியல்ல வெல்லவொணாச்
சொல்லாந் தமிழே யணி

எல்லா வணியுமணி யல்லதமிழ்ச் சொல்லா
லணியு மணியே யணி

கன்னப்பூப் பூணுங் கவின்மாதர் கண்டக்கால்
கன்னற்பாக் கொட்டுங் கவிக்கு

 

காதணிக் காதல் வெண்பா

காதணிக் காதல் கவிக்காதல் வென்றிதருந்
தாதுரைக் காதல் தமிழ்க்காதல் - மாதுரைக்
காதல் மலர்காதல் கண்டேம் விதிக்காதல்
சாதல் தழுவா தெமை


எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...