புதன், 31 டிசம்பர், 2025

மார்கழி -11

கற்றுத் தெளிந்தபல காவியத்தின் சாரத்தைக்

கற்றுக் கறவை கறந்த கனியமுதை 

முற்று மறிந்த முகுந்தனை மோகனனை 

நெற்றித் திரள திருமணணி வேந்தனை 

முற்றுந் துறந்து முழுமனதோ டேற்றுவந்து 

வெற்றித் தமிழ்மணம் வீற்றிரு மாலையைப்

பெற்றுப் புகழ்தரும் பேதைசொல் பாவையை

உற்றுப் பணிவோம் உகந்தேலோ ரெம்பாவாய்


உலகில் கட்டளைக் கலித்துறை (செவ்வாயிற் செவ்வேள்)

 உலகிற் பெருகிய தீமை யொழிய அவுணர்குலம் 

பலகால் தழைத்துச் சுரரைப் படுத்து நிலைதிரும்ப 

அலகி லனல னுதற்கண் பொறியா யவதரித்த

விலகா வினையின் விடிவாய் விளங்கும் முருகுருவே


செவ்வாய், 30 டிசம்பர், 2025

மார்கழி - 10

நோற்றுச் சுவர்க்க நுழைவரி னீற்றிடம்

காற்றை யனைய கடந்துள் ளுறைபவன் 

கூற்றன் வருந்தினங் காத்தருள் கொற்றவன் 

தோற்ற மழிவிலிச் சுந்தரத் தோளினன் 

ஞாற்று மறிந்தவன் ஞானச் சுடரொளிச்

சாற்றப் பறைதருந் தாமோ தரனையே

ஏற்று வழியிலக் கென்றிசை மாதவள்

ஏற்றத் தமிழ்ப்பா வியம்பேலோ ரெம்பாவாய் 


மருதுதைத்து விருத்தம்

 மருதுதைத்து மாமகிழ்த்தி வாகைசூடு மரசனே

கருதலார்க்கு வேங்கையா கனிந்தவர்க்குக் கற்பமா

விரதமுற்று வேண்டிநிற்க வீடுகிட்டு நாளிலே

ஒருதவத்து மொட்டிலேனெ னாலகற்று மாயனே

திங்கள், 29 டிசம்பர், 2025

மார்கழி-9

 ஆரா வமதுனை யாயர்தங் கண்ணனைப்

பாரா டலைவனைப் பன்றியாய்க் காப்பனை 

யூரா ருறவனை யுள்ளத் துறைவனைத்

தாரைக் கணவனைச் சாய்த்தவோர் வில்லனை 

நாரா யணனை நயந்துருகிப் பத்தியினா

லோரா துயர்வில்லை யென்றுணர்த்தப் பாங்குடன்

சீரார் தமிழ்மாலை தேர்ந்துரைத்த கோதைசொல்

சாரா திலைவாழ்வு சாற்றேலோ ரெம்பாவாய் 


ஞாயிறு, 28 டிசம்பர், 2025

மார்கழி-8

தேவாதி தேவனைச் செய்யவ ணாதனை

மூவா முதல்வனை மூவர்க்கு மூத்தானை

நாவாயி னண்பற்காண் கங்கை கடந்தானை 

யூழ்வினை மாய்த்துயர் வீடருளு மாயனை 

யேவினை யேவி யெழுமரம் பட்டானை

நாவார வேத்தி நலமளித்த நங்கையின்

பாவையைப் பாடாது பாழாம் பொழுதெல்லா

நோவன்றோ நோற்க வெழுவேலோ ரெம்பாவாய்  


சனி, 27 டிசம்பர், 2025

மார்கழி-7

மாசிலான் மாதவன் மாயவன் றாயவன்

கேசவன் கீதைசொல் கேள்வியி னாயகன்

யாசக னூறுசொ லேசினாற் கூற்றவன் 

கோசகன் கீசக னாசமாங் காரணி

யார்சகன் சூசக னார்சுடர் வீசிடுந்

தேசகன் பாசமே பாசமென் றோதிடு

வீசிடுந் தென்றலாம் வில்லிபுத் தூரின

ளாசுபா வாயவா வாழ்ந்தேலோ ரெம்பாவாய் 


வெள்ளி, 26 டிசம்பர், 2025

மார்கழி - 6

புள்ளூர்தி மாமாயன் புன்னாகக் கூத்தாடி 

கள்ளூறும் பாங்காகக் கண்ணறியாச் சேட்டைசெயு

முள்ளார்ந்த நிட்டையமர் யோகிகளின் றீர்சோதி 

கொள்ளாருங் கண்மயங்குங் கோவிந்தன் கோபாலன்

வெள்ளோதங் கண்வளரும் வீடருளும் வேந்தனையே

தெள்ளார்ந்த சொன்மாலை தீந்தமிழா னன்கமைத்த

கிள்ளைமகள் கோதைமொழி கேட்டு முறக்கமென்ன 

எள்ளாளோ யீன்றவளு மின்றேலோ ரெம்பாவாய் 


புதன், 24 டிசம்பர், 2025

தனந்தரும் கட்டளைக் கலித்துறை


தனந்தரு மின்பந் தரும்பொரு வேலன் றனிக்கருணை

தினந்தருந் திவ்யந் தரும்வினை தீர்த்தருள் சேந்தனினை

மனந்தரு மாண்பு தருமணி யாஞ்சுந் தரத்துடலக்

கனந்தரு முத்தி தருமுரு காவென் கணப்பொழுதே 


#கட்டளைக்கலித்துறை


குன்றக் குடியுறைக் கோமானை விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 குன்றக் குடியுறைக் கோமானைக்

குன்றங் குடியமர் தூமானை


வென்றித் திகழுரு வேலானை
வஞ்சிக் கொடியணை மயிலானைப்

பன்றிப் புகழுரு பார்வேந்தற் கென்றும் மகிழ்தரு மிளையானை
ஒன்றிக் கரமுய ருளமேத்தல் ஒன்றே வரமென உணர்வோமே

சனி, 20 டிசம்பர், 2025

மார்கழி-5

 வடமதுரை மைந்தன் வனசையவண் மன்னன்

மடமயில்க ணாடு மனங்கவர் கள்வன்

குடமெடுத் தேறிவிட்டுக் கூத்தாட வல்லன்

படமெடுத் தாடு பணிநடிக்குஞ் செல்வன்

விடமொழித்து வீடு விரைவளிக்கு நாதன்

அடைவதற் காற்றை யகமொழிந்த பாவை

கொடையறிந்து கொண்டார் குவலயத்தை யாள்வார்

படையெதற்குப் பாரிற் பகரேலோ ரெம்பாவாய் 


வெள்ளி, 19 டிசம்பர், 2025

மார்கழி-4

 இந்திரனி னாணவத்தை யேற்றிமலை மாய்ப்பானைத்


தந்திரங்கள் செய்தமரிற் சார்வாரைக் காப்பானை 


மந்திரங்கொண் மாமுனிவர் வாஞ்சையகம் வாழ்வானைச்


சுந்தரிக ணாட்டமுறுந் தூயமுனைப் பாலகனை 


யந்தரித மூத்தானை யண்டமெலாங் காப்பானைச் 


சொந்தமெனச் சேர்வாளைத் தொல்புதுவை நாட்டாளைச்


சந்தமுடன் சங்கத் தமிழ்மாலை தந்தாளை 


வந்தனைகள் செய்து வணங்கேலோ ரெம்பாவாய் 


வியாழன், 18 டிசம்பர், 2025

மார்கழி-3

 திருபடர்ந்த வாழ்வுந் திகைக்கவைக்கும் பாங்காய்

இருமடங்கு கிட்ட இனம்வளர்ந் தோங்கத்

தருகடந்த வள்ளல் தரவெமக்குப் பாங்காய்

உருவெடுத்து வந்தான் உலகளந்த நாதன்

இருளகற்ற வாழ்வில் இசைவடித்த பாவை

தெருளகத்துக் கொள்ளத் தினமருந்தி யுள்ள

அருணமக்கு வாய்த்த அருமையான மாதம்

குருவுணர்த்தப் பெற்றார் கொடையேலோ ரெம்பாவாய்

புதன், 17 டிசம்பர், 2025

மார்கழி 2

வேண்டா வினைவகை வீணென தேறிபின்

சீண்டா வகையவை தீயா லெரிமூட்டு

பாண்டவர் போர்வெல்ல பார்ப்பார நீங்கிட
வாண்டவன் மாந்தனா யன்றுவந்து தேர்கடவி
மீண்டுவர மாயையின் மேன்மையுரை போரூடே

மாண்டவர் மாய்ப்பவர் மாயனே யென்றுரைப்பான்
யாண்டுமவ னாறிலக்கா யேற்றமொழி பாவையுரை
யாண்டாளின் பாவை யருந்தேலோ ரெம்பாவாய்

செவ்வாய், 16 டிசம்பர், 2025

மார்கழிப் பாவை

 மார்கழி மாத மழையொ டலர்ந்தது 

கார்முகில் வண்ணன் கருணை பொழிந்தது 

நேர்நிக ரில்லா நிமலன் பெயர்சொல்லித்

தேர்கரங் கொண்டரு டேவ னினைவுள்ளி 

வார்புன லாடி வடிவார் மகண்மார்பன் 

சார்வடி யாரொடு சேர்ந்து தொழுதெழச் 

சீர்கழன் மாதவன் சித்தந் தெளிவிப்பான் 

ஏர்கதிர் வந்தா னெழும்பேலோ ரெம்பாவாய்


பொருப்பரசன் வெண்பா

பொருப்பரசன் பேரா புனச்சிறுமான் கேள்வா

விருப்பரசி ஒன்றமைத்த வேலா - திருப்புகழின்

நாதா மருப்பொசித்த மாயன் மருகாவுன்

போதலர்த்தாள் போற்றப் பணி 


பண்ணையுண்டு விருத்தம்

 பண்ணையுண்டு செய்துபாரி னின்பமென்றும் பல்கிட

வெண்ணெயுண்ட வாயனூது வேய்ங்குழல் லிசைத்திடப்
பெண்ணையண்டு காதனோயி னாய்ச்சியர் ரயர்ந்திட
மண்ணையுண்ட வாயனண்டங் காட்டுமூர்நன் மதுரையே

செவ்வாயிற் செவ்வேள் விருத்தம்

 மூன்று பத்து மூன்று கோடி தேவர் மூவர் மாந்தரும்

ஞான்று தொட்ட ஞானம் வேண்டி நாளு மேத்தும் நின்கழல்
சான்று செப்ப நிகரி லாத செம்மை பெற்ற மேன்மையை
மூன்று பத்து மூன்று மோசை மொழியு ரைத்த லாகுமே

சனி, 6 டிசம்பர், 2025

ஆனை போன்ற விருத்தம்

ஆனைபோன்ற வாணவத்தை வீண்சுமக்கு மானிடா

பூனைபோன்று நிலையுனக்கு வாய்த்திருப்ப தறிவையோ
ஞானமே லெழுந்துநிற்க நானழிந்த முத்தியாய்க்
கூனொழிந்த கொற்றனாக மாறுமாறு காண்மினே

வியாழன், 4 டிசம்பர், 2025

தாமோதரா கட்டளைக்கலித்துறை

காமத் தடைவுங் கலைஞானத் தாதியுங் கன்னலிசை 
சாமத் தடைவுஞ் சமயம் பலநூறு சான்றுரைக்கு
நேமத் தடைவு நிலைஞாலத் தாதியு நீளமிலாத்
தாமத் தடைவு ததிவிரும் பாயன் றனிமுதலே 

நண்பர்கள் பெயர்களைக் கொண்டொரு குறள் வெண்பா

கார்த்திகை மாதீபங் காணத் தரமேசு

மார்த்தி மதமீறா கொங்கு 


செவ்வாய், 2 டிசம்பர், 2025

ஆயிரத்துன் சந்த விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

ஆயிரத்துன் பெயர்களுண்டு அமுதமான மொழிதனில்

தூயிடத்தில் சேர்க்கவல்ல மேன்மையுள்ள முழுமையாம்
வாயடைத்து நின்றபோதும் மனமுரைக்கும் மந்திரம்
நாயினேற்குங் கவிபடிக்க ஞானமீந்த முருகனே

திங்கள், 1 டிசம்பர், 2025

வீணாம் வினைதேகம் விருத்தம்

வீணாம் வினைதேகங் காலா விதியாமுன்

நாணாக் கடையேனு ஞானம் பெறுவேனோ

தூணா யடியார்முன் காட்சித் தருபாலா 

சோணா சலவாசா சோதிப் பெருமாளே 


விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி