மாயனே யென்மனத்தி னாயக னென்றெண்ண
மாயனே நன்கு வழிகாட்டி - மாயனே
யாவுமாய் நின்றா னெனவுணரப் பேறுற்றாற்
பாவமோ பாருடைத்த பற்று
மாயனே யென்மனத்தி னாயக னென்றெண்ண
மாயனே நன்கு வழிகாட்டி - மாயனே
யாவுமாய் நின்றா னெனவுணரப் பேறுற்றாற்
பாவமோ பாருடைத்த பற்று
வேண்டுதல் வேண்டேன் விழைவரிய வேண்டாமை வேண்டேன்
றோண்டுதல் வேண்டேன் றுயரகல மீண்டெழல் வேண்டேன்
றூண்டுதல் வேண்டேன் சுருதிதம தாளுமை வேண்டேன்
றாண்டுதல் வேண்டேன் றனிமுருக னாமமென் மாண்பே
ஞானிக்கு மோனிக்கு நாதற்கு மாந்தர்க்கும்
வானிற்குந் தேவர்க்கும் வாழ்வளிக்குந்- தேனிற்கு
நாவுடைத்த தேவிக்கு நாத மொழியுளதே
பாவெடுத்துப் போற்ற வுனை
அன்னையா யத்தனா யாறமைக்கு மாசானா
யென்னையா டேவ விளமுருக - வுன்னையே
யாவுமா யெண்ணுமிவ் வாழ்விலே நேருமோ
நோவுமா நோன்பன்றோ விஃது
உமையொரு முகமுஞ் சிவன்றனி முகமு மமர்ந்திருக்க
வுலகினை யாவு முழன்றிடச் செய்த வசுரரின
லெமையொரு முகமாய்ப் பனிமதி சடைய காத்தருள்க
வெனமுறை தேவர் முழுமன தோடு சென்றிறைஞ்ச
வுமையொரு முகனாய்ச் சிவனைம் முகனா யுருவெடுத்த
வொளிதிகழ் பாலன் செருவளர் நாதன் வென்றகதை
யெமையொரு முகமா யிறைவனி னினைவா யிருத்திருக்க
விரிகதிர் ஞானம் வினைவழி வாழ்வி லொளிர்ந்திடுமே
இளங்காதல் சோடி யிணையிலா வின்ப
மளந்தாலு மிங்கறிவார் யாஅர் - விளங்கா
துளந்தெளிந் துண்மை யுணர்வுடையார்க் கல்லா
லிளந்தளி ரின்ப வெழில்
மும்மலங்கள் வீணாக முக்கண்ணன் கண்டிறக்கச்
செம்மையுரு நெஞ்சிற் றிகழ்ந்தொளிர- நம்முளே
சொற்பத மாய்ந்துபோ யந்தமிலா வம்பலத்தான்
பொற்பதந் தோன்றும் பொலிந்து
தந்தை சொல்லே கதியென் றிருந்தா
னங்கை சொல்லைத் தீவிற் பணிந்தா
னெந்தச் சொல்லைக் கையெடுப் பானோ
வந்தச் சொல்லே மெய்யெனுந் தேனோ
எழுதாமறையின் சிறப்பறியா ரெழுதாமரையின் சிறப்பறியார்
மழுவார்மரையார் சிறப்பறியார் முதுமானுடர்தஞ் சிறப்பறியார்
தொழுவார்முறையின் சிறப்பறியார் கழுவேற்றியவர் சிறப்பறியார்
பழுதாயழியும் பிறப்பறியார் பணிவாயமர்ந்தார் சிறந்தா ரவரே
அத்திரத்தி னாற்றலற்றுப் பாரதத்துப் போரினி
லத்திரத்தின் மனமுழன்ற வர்ச்சுனர்க்குப் பாகனா
யத்திரத்தை யேவநின்ற வர்க்கன்மைந்தன் மாய்த்தவு
னத்திறத்தை விரித்துரைக்க வெத்திறத்தி லேலுமே
ஊழியூழி யாழியேந்து காத்துவந்த மூர்த்தியே
நாழிவந்து நகங்கிழித்த சங்கரிக்கு மூர்த்தியே
வாழிவாழி யென்றுபோற்ற ஞானமீயு மூர்த்தியே
யேழைவாழ வுன்னையன்றி யேதுமில்லை பூர்த்தியே
முருகா குமரா வுமைபாலா மாயோன்
மருகா வெளிவிடையார் மைந்தா - பருகா
துனபுகழ் வீணா யுழலுஞ் சிறியேன்
மனமகிழ்ந் தாண்டனைநந் தி
உலக முவக்கு முமைமைந்த - வுள்ளக் கலக மகற்று மருட்கந்த
நிலவுங் கதிருஞ் சுடர்நெருப்பு - முன் னிகரில் விழிமூன் றெனவொளிருந்
திலகப் பெயரிற் றிகழமரில் -வெற்றித் திலகந் தருவா யருணிகரில்
கலியின் வலியைத் தகர்த்தெறியு - மெங் கருணைக் கடலின் றுதிமிளுரும்
தொந்திநாத னெளிமையுங் கங்கைநாதன் ஞானமு
முந்திதோற்று விதியின்றாதை யொப்பிலாத வடிவமு
மந்தரித்தன் கருணையு மருக்கன்போல வெளிச்சமுஞ்
செந்தினாதன் சேர்த்தணிந்த விந்தைமேவு கோலமோ
பதினொன்றே பாடிப் பரமனைப் பாடாக் கதிநன்றே யுய்யக் கனியமுது மாறன் றுதியொன்றே செய்த மதுரகவி சொல்லைக் கதியென்றே கொள்வார் பதமடைவர் தானே
வெண்டளைகளாலமைந்த #கலிவிருத்தம்
கருணைக் குருவகங் காமாட்சி கண்களே
கருணைக் குருவகங் காமாட்சி கண்களே
கருணைக் குருவகங் காமாட்சி கண்களே
கருணைக் குருவகங் காமாட்சி கண்களே
முதலென்று முடிவென்று முனைவென்று விடிவென்று
முகிழ்கின்ற வாழ்வென்று முடிகின்ற வீழ்வென்று
நிகழ்கின்ற நிசமென்று நினைவென்றெ திர்வென்று
புகழ்கின்ற பரனென்றி கழ்கின்ற நரனென்று
விழைவென்று விதியென்று விதிதோன்று கதியென்று
மகிழ்கின்ற வறனென்று மனநோகு பிழையென்று
திகழ்கின்ற திருமார்பன் றிருவாழிக் கரனென்றே
யகழ்கின்ற யடியார்கட் கருஞான மளிப்பானைத்
தொழுகின்ற மனநாடித் துதிப்பாட லிசைப்போமே
இருமொழி தோற்று மிறைவ னுடுக்கை
தருமொழி தாண்டவக் கூத்தோ - பருவதன்
செல்வியொடு சேர்ந்த திருக்கோலங் கண்டார்க்கு
வல்வினை யண்டுமோ வந்து
செவ்வரளிப் பூத்தொடுத்துச் செவ்வேட்குச் சாற்றிமகி
ழெவ்வேளை யேலுமோ யானறியே -னிவ்வேளைப்
பாத்தொடுத்துப் பூவன்ன பாவித் தணுகுவதே
யாத்தறிந்த வேற்ற வழி
போயிற் றென்ன கங்குலை விலக்கு
ஞாயி றன்ன ஞானச் சுடரோய்
கடிதின் மகிழுங் கரிமுக னென்ன
வுடனே யருளு வடிவேன் மன்ன
வடிவி னிகரி றிருவளர் மார்பன்
வாஞ்சை கொண்ட வள்ளி கேள்வ
பருமுலைத் துடியிடை பார்வதி யன்பா
லொருங்கே யணைத்த சண்முகச் சிறுவ
வாலா கால மருந்திக் காத்த
வால்கெழு கடவுண் மைந்த
போலுரை பொய்க்கும் புதுமை யோனே
தீராக் குறைதீர்க்குஞ் செவ்வே ளிருக்கவிங்
கோரா தவன்புகழை யுற்றபயன் - நேரேது
மில்லாப் பரிதிநமக் கீந்த கொடைவிளங்கா
நில்லா நிழற்றுதிக்கு நேர்
அங்கமேவு பணியணிந்த கங்கைநாதன் பங்கின
ளங்கைதங்கு சங்குசாடு செங்கணாதன் பங்கின
டுங்கவேத னாற்றலான தூயஞான மங்கையுஞ்
சிங்கவேறு நங்கையென்ற சித்தமேவ முத்தியே
காலமென்ற கூறுதிக்க மூலமான தத்துவ
ஞாலமன்று நன்குதிக்க ஞானமான தத்துவஞ்
சீலநன்று சேர்ந்திருக்கத் திருவுடைத்த தத்துவங்
கோலமொன்று கூறுமூன்று காளிவாணி திருவலோ
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி