ஞாயிறு, 30 நவம்பர், 2025

உண்டுமிழ்ந்து சந்த விருத்தம்

உண்டு மிழ்ந்தி டந்த ளந்த வொன்று பார நீங்கநீ

பண்டி ழிந்து தேர்ந டத்து பாக னாகி பாரதச்
சண்டை யுண்டு செய்து கந்து தந்த வாழும் போதனை
மொண்டு மொண்டு தேனு கத்த லுற்ற வாழ்வின் பற்றிதே

காதலை எக்காலுஞ் செய்யாதிரு வெண்பா

 செத்தாலுஞ் சாவதே சாலவு நன்றென

வொத்தாசை யொன்றுமில்லா வூழ்வினையாற் - றத்தளிக்க
முக்காலு மின்பொழிக்கு மோகமாங் காதலை
யெக்காலுஞ் செய்யா திரு

நேசமொன்றிக் காதலிப்பீர் நீர்

 காதலின்றி வாழ்விற் களையில்லை புத்துயிரின்

ஆதலின்றி ஆழிசூழ் பாரில்லை - மாதிலொன்றும்
ஈசனும் நாரா யணனும் கரிநுமக்கு
நேசமொன்றிக் காதலிப்பீர் நீர்

வேடன் வடிவில் விருத்தம்

வேடன் வடிவி லருள்வோனை

வேதன் றலையொன் றரிவோனைக் கூட னகரி லரசாளும்
கோலக் கயலா டலைவோனை ஆடுங் கலையின் முதல்வோனை
ஆலி னிழலில மர்வோனை நாடு மனமே நமையாளு
நாளென் றிறைவா நவிலாயே

திருவோ டிரவே கட்டளைக் கலித்துறை

 திருவோ டிரவே திருமா லெனுந்திரு நாமம்பெற்றார்

திருவோ டிரவே சிவனா ரிடைஞ்சல் சிதைத்தவளாந்
திருவோ டிரவே தினிவாழ்வில் வேதனை தீரிருள்சேர்ந்
திருவோ டிரவே யருக்க னிறத்தா ளருளுளதே

புதன், 26 நவம்பர், 2025

வேண்டிநின்ற

 வேண்டிநின்ற வேட்கையாண்டு வீண்டிரிந்த மூடனாய்

மீண்டுமீண்டு கூண்டிலாண்டு மாண்டுபோக வாரிதி
யாண்டுமென்னை விட்டிடாமல் வேண்டியாண்ட வேலனே
மூண்டகாதல் மூன்றிரண்டு முகங்கள்காண வேங்குதே

வேண்டுவன

வேண்டுவன வேண்டா வெனவிவரம் யாமறியோங் கூண்டிலுறை கொற்றமிலி கூற்றுவன் கைப்பாவை பாண்டவரை யீடேற்று பச்சைப் புயன்மருக! ஆண்டெமை யீடேற் றணைத்து


காமர்தாதை

 காமர்தாதை வில்லெடுக்க சேமமாகு முலகெலாம்

ராமர்சீதை கதைகதைக்க ஏமமாகு நாளெலாம்
சாமகீத யாமநாடர் தாமுகந்த நாமனின்
வாமகாதை மனமிருக்க வாட்டமெம்மை நாடுமே

செவ்வாய், 25 நவம்பர், 2025

அறம்வளர்த்த வெண்பா

அறம்வளர்த்த நாயகி யாழ்விருப்பக் கண்ணி

மறம்வளர்த்த மாவரசி மாதா - புறம்வளர்த்த 

பொய்யைந்தின் றாக்கத்தாற் பொல்லே னுனைமறந்து

மெய்யைந்தின் மேன்மை விளம்பு 


திங்கள், 24 நவம்பர், 2025

திருவோடு இன்னிசை வெண்பா

திருவோ டிருக்குந் திருமா லடியேந்

திருவோ டெடுக்குஞ் சிவனா ரடியேந்
திருவோ டிருந்து திளைத்தலு மொப்பாந்
திருவோ டெடுப்பத னோடு

வளை உகிர்த்த விருத்தம்

வளையு கிர்த்த குடல்க ளைந்து மாலை சூடு சிங்கமா 

வளையு கந்த வாய்ச்சி மாரி னாழ்ந்த காதல் சிங்கமா

தளைய கற்று தாள்ப தித்து மாது மீட்ட சிங்கமா

தெளிவ கத்தி னன்ப ருள்ள மொளிப ரப்பு மங்கியே 


ஞாயிறு, 23 நவம்பர், 2025

வேடன் எய்த சந்த விருத்தம்


வேட னெய்த வம்பி னுக்கி ரைய தான வேடவுன் சீட னெய்த வம்பி னுக்கி றைய தான போதமீ ணாட ணைந்தொ ரைவ ருய்ய நீதி கேட்ட தூதநீ சேட னெய்துன் சேவை செய்யு மாய வாய சேடியே

ஆனைக்கும் அடி சறுக்கும் வெண்பா

அடிசறுக்கும் என்றஞ்சி ஆற்றினா டோமோ

மிடிவருத்தும் என்றஞ்சக் கிட்டா - படைவளர்த்த
சேனைக்கும் வெற்றி திசையெட்டின் பார்சுமக்கும்
ஆனைக்கும் அஃதே ஒழுங்கு

ஆனைக்கும் அடிசறுக்கும் வெண்பா

ஐரா வதெமென்னும் ஆனைக்கும் ஆணவந்தான்

தொய்வாம் இழிபிறவி தோற்றுவிக்கும் - உய்வாம்

படிசறுக்கும் சீவர்க்குப் பற்றிறையே காணீர் 

அடிசறுக்கும் ஆற்றின்மீ ளற்கு 

முத்திதரும் வெண்பா

 முத்திதரு மெட்டெழுத்தை முற்று முணர்ந்தோது

பத்திநிலை வாய்க்கப் பலபிறவி யர்த்தமிலா
வத்திகிரி பேரரு ளாளன் மனமுவக்கச்
சித்திக்குங் சீக்கிரஞ் சீர்த்து

அவனே தமிழானான் வெண்பா


அவனே தமிழானா னாதியந்த மில்லா

தவனே யடையாறு மானா -னவனே 

யவைத்தலையாய்ப் பாடி யகப்பொரு டந்தான்

சிவை(த்)தலையை யெண்ணிச் சிவந்து 


புதன், 19 நவம்பர், 2025

உமையாளடி சரணே விருத்தம் - 3

விடையானிட முடையாடுடி யிடையாண்மல ரடியாள்

விடையானடு மிடையானுடன் படிமீதுதி யிடையாள்
அடியாரிடர் நொடிதீர்த்திடு பரிவார்கடை விழியாள்
முடிமீதணி மதிவாணுத லுமையாளடி சரணே

உமையாளடி சரணே விருத்தம்

மலைமாமுலை யமுதாலுயி ரடைவேகிடு வகையாள் 

மலைமாடின மிமயோர்துதி கயலார்விழி மடவாள்

கலைமான்மழு கரமாள்பவர் குறைதீர்த்தரு டுணையாள் 

உலகேழினி னொருதாயவ ளுமையாளடி சரணே 


உமையாளடி சரணே விருத்தம்

மகிடாசுரன் றலைவாங்கிடு திரிசூலங்கை யுடையாள்

சகடாசுரன் றலைவாங்கிடு சிறுபிள்ளையி னிளையாள் 

புகழாரரன் றலைசூடிடு மரவாழியை யுடையாள் 

துகளாகிடு நிலைமாற்றிடு முமையாளடி சரணே 


செவ்வாய், 18 நவம்பர், 2025

என்னுள் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 என்னு ளுறைவானை யெங்கெங்குத் தேடியு

மன்னு மகத்துவனைக் கண்டிலனே - கன்னலே
செந்தமி ழண்ணலே செவ்வேட் பரம்பொருளே
வந்தணைத்துக் காட்டு வழி

சஞ்சலங்கள் தீர்த்து வைக்கும் எழுசீர்ச் சந்த விருத்தம்

சஞ்ச லங்க டீர்த்து வைக்கு மஞ்ச லங்கை மழலைமாய்

வெஞ்சி னங்க டீப்பி டித்த கஞ்ச னேவி ராக்கதர்

துஞ்சி வீழ லீலை செய்த வஞ்ச னத்து வண்ணனைத்

தஞ்ச மென்று நண்ணு வார்க்க ணஞ்ச லென்ப தண்டுமோ

வெள்ளி, 14 நவம்பர், 2025

வேலேந்தி விருத்தம்

 வேலேந்தி வினைதீர்க்கும் வீராதி வீரா

சூலேந்து சிவனார்க்கு மார்சாமி நாதா
மாலேந்து மனிதர்க்கும் வாழ்வீயும் பாலா
காலேந்து முடனீக்கு முன்னேவந் தாளே

வியாழன், 13 நவம்பர், 2025

பார்ப்பதி பாதம் பணி சிலேடை வெண்பா

பச்சை மலைமேனி பார்வை பொழிகருணை

இச்சை விழியீர்ப்பி னீடற்ற - பிச்சையிட்டு 

நீர்ப்பதி சாபத்தை நீக்கு நிறைகுணத்துப்

பார்ப்பதி பாதம் பணி 


பார்ப்பதி பாதம் பணிந்து வெண்பா

 மாயனைச் சேர மனவுடலை யொன்றாக்கித்

தூய தவம்பேணத் துப்புளதோ? - வாயினு
நோற்பதெனின் பாவையர்போ னோற்போ மடைவழியாம்
பார்ப்பதி பாதம் பணிந்து

செவ்வாய், 11 நவம்பர், 2025

பெரு வெளி முதல் விருத்தம்(செவ்வாயிற் செவ்வேள்)

 பெருவெளிமுத லிருநிலம்வரை விரவியபுக ழொருவன்

சுரருலகுறப் பொருதவுணரி னுருசிதையயில் விரகன்
குருவடிவினிற் பிரணவமதை யரன்செவியுரை முருகன்
திருவளருர கருமுகிலரி மருகனதடி சரணே

திங்கள், 10 நவம்பர், 2025

மெய்யானை விருத்தம்

 மெய்யானை மூன்று விழியானை

       வேணி மதியானை நதியானைச்  

செய்யானை யால மிடறானை

      நெக்கு மரவானை மழுமானங்

கையானைத் தீயின் வடிவானைக் 

      காம னெரிகண்ட நுதலானை 

வையாளு மாதி னரையானை 

     வாசி யுருவாக விழையாவே 


ஞாயிறு, 9 நவம்பர், 2025

திருக்கடிகை நரசிம்மர் விருத்தம்

 த்யானமுற்ற வன்பர்காண வுடனுகந்து தோன்றிடும்

பானகத்தை மிகவிரும்பும் ஞானமுத்தி சாதனம்

தேனுகக்கும் வண்டுநாதந் தேர்ந்தொலிக்குஞ் சோலைசூழ்

வானுகக்குங் கடிகையாளும் யோகமூர்த்தி சீயமே

யோகநிட்டை (திருக்கடிகை விருத்தம்)

யோகநிட்டை யாசனம் மாலனன்ன நாற்கரம்

சோகமற் றன்பர்வாழத் தோத்திரஞ்செய் செபவடம்

மேகமொத்த வண்ணனன்ன சங்கினோடு சக்கரம்

ஆகமேந்து ஞானமூர்த்தி கடிகை யாஞ்சநேயனே

ஈரோ வில்லன் வெண்பா

 ஈரோசைச் செம்மொழிக ளீன்ற துடியிசைப்ப

நீரோசை தங்குசடை நெஞ்சுருக்கப் - பாரோசை

தானடங்கக் காலோச்சு தாண்டவங் காண்பித்தி

யானொடுங்க வீமலைவில் லன்

ஆழ் கடலின் வெண்பா

ஆழ்கடலி னஞ்சுண்டா யான்விடையின் மீதூர்ந்தாய்ப்
பாழ்கடல் சம்ஸாரப் பற்றறுப்பா - யேழ்கடல்சூழ்
தென்னிலங்கைக் கோமான் றிமிரடங்கக் கால்விரலைப்
பொன்விலங்கல் வைத்தாய்ப் பொதிந்து 


செவ்வாய், 4 நவம்பர், 2025

வாரிபார்த்த சீரலைவாய்த் தேவு வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 சூரனுஞ் சுற்றமுந் தோற்கிலை வென்றரே?


காரிரு ணீங்கியுன் பேரருள் பெற்றரே!
மாரிகாத்த மாமனன்ன மட்டற்ற வள்ளலே
வாரிபார்த்த சீரலைவாய்த் தேவு !

சனி, 1 நவம்பர், 2025

முதல் திருவந்தாதி

அரனா ரணாம மான்விடை புள்ளூர்தி

யுரைநூன் மறையுறையுங் கோவில் - வரைநீர்

கரும மழிப்பளிப்புக் கையதுவே னேமி

யுருவமெரி கார்மேனி யொன்று


விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி