குற்றமற்ற நெஞ்சமென்று கூறுகின்ற தேற்றமா கொற்றமுற்று முற்றிருந்து நற்றவங்க ளேற்றமா சுற்றமற்ற பித்தனன்ன சுற்றநின்ற போதிலும் பெற்றமுற்ற குட்டனெண்ண மற்றிராத தேற்றமே
குற்றமற்ற நெஞ்சமென்று கூறுகின்ற தேற்றமா கொற்றமுற்று முற்றிருந்து நற்றவங்க ளேற்றமா சுற்றமற்ற பித்தனன்ன சுற்றநின்ற போதிலும் பெற்றமுற்ற குட்டனெண்ண மற்றிராத தேற்றமே
பொருளற்ற பொருளைப் பொருளென் றெண்ணு மருளுற்ற மனிதர் மதியு மாற இருளற்ற வெளியி லினிதே மன்னும் சுருளுற்ற முடியன் றுதியை யெண்ணே
மனவலியுறு மனைவழிவினை தொடர்பிறவியின் வரவோ ? மனவலியுற மனையழுநிலை வினைவழிவரு துயரோ ? முனைவலியுற வினைவழிவரு வலிகளைவது நிலையோ ? சினைவழியறு முழுமுதலினை நினைவினிலுற னிலையே !
பார்ப்பாரங் குன்றப் பார்த்தன்றே ரோட்டிப்
பார்ப்பாரங் கஞ்சப் பாருருவங் காட்டிப்
பார்ப்பாரங் காக்கப் போர்க்கீதஞ் சொற்ற
பார்ப்பாரங் கேத்து பார்க்கேள்வற் போற்றே
அகமுரைத்த புறமுரைத்த வகவைகாண வழியிலா இகமுரைத்த பரமுரைத்த விருமைதாண்டி யளவிலாச் சுகமுரைத்த மறமுரைத்த வறமுரைத்த மேன்மொழி முகமுரைக்க முடிவுரைக்க தமிழதற்கு முடியுமே?
பிழைபொறுப்பாய்ப் பிள்ளையுன புகழ்பாடத் தாமதித்தேன் மழைமுகிலாய் வரமருளும் மதகளிறே மதியளிப்பாய் விழைபொழியுஞ் சித்தமெல்லாம் விரைமலரா லுனைப்பணியத் தழைதமிழாற் றளராது தனியானைப் போற்றிடவே
உருட்டுவிடக் குறுமுனியின் கமண்டலத்தைக் காவிரியா பொருதுவந்தாய்க் கயமுகனைப் பொழிகருணை யுமைமைந்தா அருமைறையி னரும்பொருளே வினையறுக்கும் முதற்பொருளே கருமயிலோன் கந்தனிடங் கனிகவர்ந்த சுடர்மதியே
திருவளரும் பெருவயிறு திகழ்செவியோ குறைகளையும் நெருடிவரு வினையறுக்கு நிகரில்லா மருப்பொன்று கருவளருங் கலையளிக்குங் கரிமுகமே பணியமரும் அரைஞாணோ யோகவுரு வெனவுணர்ந்து பணிமனனே
கலிமலியுங் கணமதிலும் வலியமதி நனியருளும் எலிநெளியு மிளையவனி னலரடியை மனநிறுத்தி ஒலியழகின் றுதியமைத்துப் புலனைந்து மொன்றிசைத்துக் குலமொளிரக் கரங்குவிவார் தலைவணங்கத் தக்கவரே
களிமண்ணைக் கையுருட்டிக் கணபதியி னுருவமைத் தெளியவகை யினிப்பாக்கி யெலியேறு மிறைக்களித் தளிமண்ணை யென்றேத்த வுடனருளுங் கரிமுகனைத் தெளிமனமே நாடியவன் றிருவடியிற் றிளைமனனே
மாலாயுத மீறாமொழி காரார்குழ லழகும்
வேலாயுத மீனேர்விழி சேயாங்கனி யதரம்
நூலாமிடை மேலேறிய பாலாமுலை நகையும்
சூலாயுத நீலாம்பரி கோலாபுரி வடிவே
மாமயில் வாகனத்தான் - மலர் மார்பெழின் மாமனைப் போல்குணத்தான் காமனைச் சுட்டெரித்தான் - பொறி கங்கையில் வீழ்ந்திட விங்குதித்தான் தாமரை மேலுதித்தான் - பொருள் தாமறி யாதது மேல்சிறைத்தான் யாமளை வேல்பிடித்தான் - வெளி யானைத னேரிழை கற்பகத்தானே
அழியும் பொருளு மழியா வறிவுங் கழியும் பொழுதுங் கழியா -விழைவும் புவிமேற் படைத்தான் புகழைப் புகல்வீர் நவமாய் நயந்திர ஞான்று(ம்)
அவியு முடலு மழியும் பொருளும் புவியிற் பிணியும் பிணையோ - நவில்வோ முடியும் வரையின் முருகன் பெயரை விடியும் வினைகள் விரைந்து
கணைவிழிவரு படிப்பினையதைத் துணைவுறவரும் பெருந்துயரதை மனைவழிவரு படிப்பினையதை வினைவழிவரு படிப்பினையதைத் தனைநினைவுறக் கலமறுத்திட - ஞான்றும் தொடர்ந்தே தருமா மிடரை கடந்து செல்லக் கற்றிடும் வரையே
காதல்காதல் காதலென்று மாரடித்துக் கொள்கிறீர் மோதல்சாதல் வாழ்தலென்று காதலெங்கு மாய்ந்தது? மோதல்சாதல் வாழ்தல்யாவுங் காதலென்று நின்றபின் ராதைதந்த காதல்போல கண்ணனெங்குங் காணுமே !
பெண்மையில்லை யாண்மையில்லை பிரிவதென்று மில்லையே யண்மையில்லை சேய்மையில்லை பிரிவதென்று மில்லையே யொண்மையில்லை யிருளுமில்லை பிரிவதென்று மில்லையே தண்மையில்லை தாபமில்லை பிரிவதென்று மில்லையே
வெண்மையில்லை கருமையில்லை பிரிவதென்று மில்லையே மண்மையுண்ட தொண்டையண்ட மாயவாய வாயன்மேற் கண்மையுண்ட கருமைகொண்ட கொண்டைகொண்ட குழலுடைப் பெண்மைமண்டு பின்னைகாதல் பிரிவதென்று மில்லையே
இரந்துண்ணும் வாழ்க்கை யினிதாகத் தோன்று மிருந்தென்ன வென்றுமன மேங்குந் - திருமணத்தைச் செய்தேஎ தீர்வே னெனவுழலு மன்பருக் கெய்தே யிருக்கும் வினை
மைவளரு மாயற்கு மாலை யணிந்தளித்த
மெய்வளையன் மீதொளிரும் பாவையலர் - தெய்வதிருப்
பாவைமே னாச்சியார் பாங்குமொழி செய்துவந்த
பூவைமே லெத்தனை பூ
கீதைதந்த மேன்மைநின்ற பாண்டுமைந்தன் பாங்கெதோ
தாதைதந்த வாயிரத்தை யோதநின்ற மாண்பெதோ
பாதைதந்த மேதைதாதை விட்டுசித்தன் பேதையெங்
கோதைதந்த தமிழெமக்கு நூறுபத்து நாமமே
வேதமாதி கீதநாதம் வேண்டிநின்ற பொற்கழல்
கோதிலாத மூவர்தேவ ரேத்துகின்ற நற்கழல்
சீதைராதை கோதைசோதை கோதிலோதை யார்கழல்
போதுநாதை யாதுமாதி சீதபாத போததே
வெற்பகத்து வெட்டவிட்ட வேலைவற்று வேலவன்
முற்பகட்டு மூன்றுமாய மூரலுற்ற மூலவன்
வெற்பகத்து வெள்ளெயிற்று வேதமீந்த வேழவன்
கற்பகத்து நற்பதத்தை யொன்றுசேர வாயிலே
வெற்பெடுத்த வில்லனோடு விடையமர்ந்த வேல்விழி
வெற்பரன்றன் வாமபாகி வெற்புராசன் குமரியாந்
தற்பரத்தி னற்புதங்க ணற்பதங்க ளறியுமோ
கற்பகத்தின் பொற்பதங்கண் மூலவாதி சிற்பமே
அப்பணிந்த வப்பனைந்து மொப்பிலம்மை ஒன்றுமீ
சுப்பணிந்த தப்பிலாறு மொப்புணர்ந்த வன்பர்தம்
முப்பணிந்து குப்பிறந்த வெப்புமாயு நாதர்தம்
செப்பணிந்த வெற்பனாமம் பொற்புணர்ந்து செப்பவே
செந்தி னகர னிருக்க விருளேது செந்தமிழா செந்தி னகர னிருக்க விருளேது செம்மையிலாச் செந்தி னகர னிருக்க விருளேது சீரலைவாய் செந்தி னகர னிருக்க விருளேது செப்புகவே
திங்கடுண்ட பிறையணிந்த வங்கைமீட்டு வீணையை மங்கைசாயு தோணெகிழ்ந்து துங்ககீதம் பாடுதோ பொங்குகங்கை முடியடக்கச் சங்குநாத மானதோ தங்கவெற்பின் வண்ணமென்ன நங்கைபங்க வீசனே
குடர்வழிவரு பிணிபிறவியை யடர்கடலிடை யெடுத்துப் படருலகினி லிடர்படுமுயிர் பழவினைகளை யறுத்து நடலையுமற நளினமுமுற நயவரமழை யளிக்கக் குடருரிவடி வரியுருவரி யளியெமதிர குறையே?
சடைவளர்த்துத் தாடிவைக்கத் தவஞ்சிறக்கக் கூடுமோ கொடைவளர்த்துத் தானஞ்செய்யக் கடவுள்ஞானஞ் கூடுமோ படைவளர்த்துப் பகைசெறுக்கப் பழவினைஇக டீருமோ தொடையமர்த்திக் குடர்களைந்த வடிவடைந்துய் நெஞ்சமே
செய்தவங்க ளெய்தநின்ற செம்மையன்பர் நேயவா மெய்தவங்க ணின்றுநோற்க மெய்விளக்கு மாதவா வைதவங்க ளாளுபால னுய்யமாய்த்த நேமியா பொய்த்தவங்க ளாளுமெங்கள் புந்தியாளு கேசவா !
பண்டுபோரி னச்சமுற்ற பாலவேட மேற்றுநீ கண்டிறந்தெ ரிக்கவைத்தி கண்வளர்ந்த மாந்தனை யெண்டிறங்க ளாதியாயு மேயவோடி லீலைசெய் உண்டமண்ணை யண்டமாக்கு மாயவாய வாயனே
கண்ண னவன்பெயர் கருமை - அதை எண்ண மனம்பெறு மொருமை கண்ண னவனிறங் கருமை - அது வண்ட மணைத்திடு மொருமை கண்ண னுறைசிலை கருமை - அதை நண்ண வுயிர்பெறும் பெருமை கண்ண னிறைகுணங் கருணை - ததி வெண்ணெய் விரும்பிடும் பரனே
நாகமேந்தி மாரிகாத்த நாகமாடு நாயகன் சோகமேந்தி வில்விடுத்த ஶ்வேதனுய்ய வாதுதேர்ப் பாகனாக கீதைசொன்ன பாங்கினேரி லாவுள மோகநாத னென்றுவந்து முற்றுமென்னை யாள்வனே
குன்றெடுத்துக் கன்றுகாத்துக் கன்றெறிந்து கனியுதிர்த் தன்றடுத்து வீயகஞ்சன் கஞ்சனீன்ற வுந்தியோய் ஒன்றுடுத்த வில்லையென்று கைகளொன்றி மாதுனை அன்றிறைஞ்சப் பெண்மைகாத்த கண்மைவண்ண வாழியே
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மாலைகள் புனையும் - மலர் மன்மதன் கண்ணெரித் தணையும் வண்டுலா வாலவா யரனே - மணி கண்டநின் றாளெமக் கரணே
போர்விரும்பு காதலா பூதப் படைத்தலைவா
சூர்தடிந்த வேலாளா சுந்தரா - வேர்விரிந்த
கல்லா லடியம ரீசர்க்கு மாசானே
நில்லா விளவுருவே நீ
பொருளுக் குழன்றாடு வாழ்க்கை - கந்தன்
அருளுக் கணியாக என்றென்றும் வேட்கை
மருளுக் குழன்றாடு வாழ்க்கை - சேந்தன்
தெருளுக் கணியாக என்றென்றும் வேட்கை
இருளுக் கினியாமோ வாழ்வே - உண்மை
பொருளுக் கருளான பின்னேது தாழ்வே
செருவுக் கணியான வேளே - உன்றன்
திருவுக் கணியாக தந்தாளுன் தாளே
மாயவேட முனிவனாயி லங்கைமன்னன் சூழ்ச்சியால் தூயளென்னை விட்டுதூர தேசமேகு துயரதில் சாயவேந்தன் போர்தொடுக்க சார்ங்கனுக்கு விடயமில் நேயளுக்கு வயதுமாற நேரமோடு துயரதே
பார்வையொன்றி யுண்மைகாணப் பண்படுத்து ஞானவேல்
பாரமாய வினையொழித்துப் பசுமமாக்கு கொற்றவேல்
சூர்வரிந்தி யாவுமாள விண்ணவர்க்குத் தோதவன்
மார்வரிந்து பட்சியாக மாண்புமிக்க வீரவேல்
கார்விரிந்த கருணையான சத்திதந்த சத்திவேல்
கான்றிரிந்த வள்ளிதேவி கண்ணையொத்த சோதிவேல்
தார்விரிந்த வழகுமார்பன் கந்தனாளு முத்திவேல்
தாழ்விரிந்து பத்தர்காக்கு மாய்விலாத வெற்றிவேல்
வெற்றிவேலை வெற்பெறிந்து விண்ணவர்கள் மீள்சிறை செற்றசூரன் சேவலென்று மேறதான மயிலுமா யுற்றநாதன் கருணையென்ற வுருவெடுத்த கந்த்னாய்ப் பற்றரிந்து கொற்றமாள யெற்றையண்டு துன்பமே
கற்கோவில் கட்டக் கடையற் கிலைதிறம் பொற்கோவில் கட்டப் பொருளில்லை புங்கவற்குச் சொற்கோவில் கட்டத் துணிவிருந்து ஞானிமிலை நற்கோவில் கொள்ளாய் மனம்
தோயமாய வரவணைக்கண் யோகமாளு நித்திரை தூயமாயை யாளநாளு மெண்ணிலாத வண்டமா சாயவாழ சாட்சியான வெங்குமேவு நேயநீ காயமாய வாயனாக வாயர்செய்த தவமெனே
கல்லா லடித்தேவென் றுற்ற பயனென்னே ? கல்லா லடித்தேவென் றுற்ற பயனென்னே ? கல்லா லடித்தேவென் றுற்ற பயனென்னே! கல்லா லடித்தேவென் றுற்ற பயனெண்ணே!
சேதியோத வீதிசென்று போதுபோக்கு நாளிலே
நீதியோது நூல்கடேடி ஞானமேவு நாட்டமாய்விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி