வியாழன், 29 ஆகஸ்ட், 2024

கன்றெறிந்து கலி விருத்தம்

கன்றெறிந்து கன்றுமேய்த்துக் குன்றெடுத்த கண்ணனா
சென்றுமீட்க பூமியாளைத் தந்தமேந்து பன்றியா
வென்றுபோர்கள் வீற்றுநின்றி ராமராம நாரணா
வின்றுமென்றுங் காக்கவெம்மை யுன்றனாசி நின்றதே
#கலிவிருத்தம்

புதன், 28 ஆகஸ்ட், 2024

"வெட்டியாக" கலி விருத்தம்

வெட்டியாக வேலையின்றி வீற்றிருந்து நாளெலா
மிட்டமான காட்சிதேடி யிங்குமங்கு மலையவே
யெட்டிவானை நோக்கியாழ வேற்றமான பிம்பமாய்க்
குட்டியானை யென்றுநின்ற கொண்டலுள்ள மள்ளுமே

தேவாதி தேவரும் வெண்பா

  

தேவாதி தேவருந் தீரா வினையகலப்

பாவாலே போற்றிப் பணிந்துவக்கு - மேவரு
 
மாலுறுஞ் சேவை மகிழ்ந்தளிக்கு மாதவனின்
 
மாலிருஞ் சோலை மலை
 
 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

தானைத் தலைவன் கலி விருத்தம்

தானைத் தலைவன் தளிர்புரையுந் தாள்பணிந்
தானைத் தலைவ னழகுமுக மாறாழ்ந்து
மோனைத் தொடையழகின் முந்தெதுகை சேர்ந்தமையத்
தேனைக் குழைத்துரைப்போந் தீந்தமிழாற் செவ்வேட்கே

கன்றெறிந்து கலி விருத்தம்

 

கன்றெறிந்து கனியுதிர்த்த கைகளிந்த கைகளே
குன்றெடுத்து மழைதடுத்த விரல்களிந்த விரல்களே
சென்றுடுத்த சேலைதந்த சிந்தையாளுந் தேவனே
யின்றுவந்து வெண்ணையுண்க வூழிதோறுந் தாங்கவே
 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

பிறப்புற்ற வெண்பா

பிறப்புற்ற செல்வந்தர் பெற்றமகன் சொல்கேட்
டறப்பற்று வேண்டி யரனைச் - சிறப்புற்ற
பாவா லலங்கரித்தார் பட்டினத்தா ரொற்றியூர்ச்
சாவா துறைந்தார் சிவத்து
#வெண்பா

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

எல்லாம் அறிபவளே வெண்பா

எல்லா மறிபவளே யெல்லா மருள்பவளே
பொல்லா தவர்க்குப் பயங்கரீ - யெல்லாத்
துயரு மரிபவளே தாயே திருவே
யுயர்வணக்க மென்று முனக்கு 

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

காரார்முகில் கலிவிருத்தம்

காரார்முகில் கோவேதுணை தார்மார்பினி லுறைவா
ணீராலுனை நாளுஞ்சொரி கார்யானைக  ணடுவே
சீரார்மரை வீறாளுமை  நாராயணி யுனதா
டீராவினை சேராதெமை மாறாநிலை தருமே 

#கலிவிருத்தம் 

புதன், 21 ஆகஸ்ட், 2024

உறுதியைக் கைவிடாது வெண்பா

உறுதியைக் கைவிடா துன்செயலை மேற்கொண்
டிறுதியை யீவா யிறைக்க - ணறுதித்
தரத்தாற் றமைக்குந் தடங்கலாய்த் தோன்றுஞ்
சிரத்தாற் றவன்கண் சினம்

நாவொடுக்கி கலி விருத்தம்

நாவொடுக்கி நோன்பிருந்து ஞானமுற்று நாளெலாம்
பாவடுக்கி நன்றிசைக்க பாவையுள்ளம் போலவே
மூவடிக்கி ரந்துநின்ற மூப்பிலாத வாதிமேன்
மாவலிக்கு மாண்பளித்த மாவடிக்கண் டஞ்சமே

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

கடன்மேவிய கலி விருத்தம்

கடன்மேவிய நெடுவேதனை கடும்வாழ்வெனை விடுமோ
குடன்மேவிய நெடுவேதனை குறைந்தாற்சுகம் வருமே
கடன்மேவிய நெடுமால்வரை  கடைந்தான்கழல் கிடைத்தாற்
குடன்மேவிய நெடுவேதனை கொடும்வாழ்வறு நிசமே

 

பழமாலை வெண்பா

பழமாலை யேந்தும் பழையோனை வேண்ட
நுழையாதே யெந்நாளுந் துன்ப - மழைமேக
மன்ன வருளு மரிமருகன் வீற்றிருக்க
வென்ன கவலை யெமக்கு

 

கூன்பிறையை வெண்பா ( செவ்வாயிற் செவ்வேள்)

கூன்பிறையை யார்சூடுந் தான்றோன்றிப் பேரொளியான்
வான்றோன்றற் காக்க வரமளித்துத் - தான்றோன்றிச்
சண்முகனாய் நின்றது நற்பேறாம் போற்றியவன்
ஒண்முகத்திற் கோதொரு  பாட்டு 

கருணா நிதியே வெண்பா

கருணா நிதியே கனிமொழி பாடு
மருணான் மறையின் பழநீ - திருவா
ரெமிராமச் சந்திர னின்ப மருகா
சமரா செயலலி தா

 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

மந்திரங்கொள் விருத்தம்

 

மந்திரங்கொள் வேள்வியு மஞ்சனங்கொண் மேனியு
மங்கைதங்கு மார்பினன் மண்மடந்தை சூழ்ந்திடத்
தந்திரங்கொண் டைவரை தேர்நடத்தும் பாகனாய்ச்
சொந்தபந்தம் வீழ்த்திநல் வெற்றிவாகை சூடவே
பந்தனான நண்பனாய்ப் பார்விளக்கும் பரமனாய்ப்
பாரதத்தி னாயகன் பார்ச்சிறந்த மாணியன்
எந்திரங்கொள் வாழ்விலே ஏற்ற(ம்)பெற்று நாமுய
இங்குவந்த டைந்தனன் வையாவூர்க் கள்ளனே


எண்சீர் விருத்தம் 

சனி, 17 ஆகஸ்ட், 2024

அரனார் அகமகிழ் விருத்தம்

அரனா ரகமகிழ் மைந்தா
    அணியா றகமுறை நாதா
சிரமா றுடையுமை பாலா
     சிகையார் மயிலமர் வேலா
மரையார் திருமகள் செல்வி
     மனையாய் மணமகிழ் கோவே
திரையார் துயிலரி மருகா
     துணையா ருயிருய வேறே

 

அறு சீர் விருத்தம் 

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

மாயப் பிறப்பறுக்கும் வெண்பா

மாயப் பிறப்பறுக்கு மாயவனை நீங்காத
தோயவன் மார்புறையுந் தூயவ - ணாயகன்
பேரதனில் பாதியிவள் பெற்றுளதால் பூசனைக
ணேரிவட்குச் செல்லு நிதம்

 

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

கடல் துயின்ற கலி விருத்தம்

கடற்றுயின்ற மாதவா கடற்கடைந்த தெங்ஙனே
குடற்களைந்த சிங்கமாய் குதித்துவந்த தெங்ஙனே
கடற்கடந்தி லங்கைவீ ழலர்க்கணைக ளெங்ஙனே
படைத்தகால நேமியாய் புலர்ந்தகால முன்னுளே

கலி விருத்தம் 

குடத்திருந்த கலி விருத்தம்

குடத்திருந்த வெண்ணையைக் குடித்துவந்த வாயனே
குடத்திருந்தை யென்பதாற் கொடுத்துவீடு தாயுளங்
குடத்திருந்த சிற்றுயிர்க் கொடுங்கணைக்கண் காத்தனைக்
குடத்திருந்து ழற்பிறப் பறுக்கவல்லை யல்லையே

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

செவ்வாயிற் செவ்வேள் கலி விருத்தம்

அவனிக் கறுமுக னாறுதித்தா னன்று
சிவனுக் கருமகன் சீருரைத்தா னன்றா
யுவமைக் கொருபொரு ளாருரைப்பார் குன்றா
ளிவனுக் கிணையிவ னேறுடைத்தான் கன்றே


திங்கள், 12 ஆகஸ்ட், 2024

அஞ்சுகம் வெண்பா (மீனாக்ஷி)

அஞ்சுகங் கையேந்தி யஞ்சகங் காத்தருளு
நஞ்சகற்றி நாதர்க் கமுதாக்குங் - கொஞ்சுதமிழ்ப்
பாவிரும்பும் வேடமகள் பங்கற்கு வேறந்த
தேவிபுகழ் செப்பற்கே நாவு
#வெண்பா

மாடெடுத்து மரமெறிந்து கலி விருத்தம்

மாடெடுத்து மரமெறிந்து கனியுதிர்த்த தன்றியுங்  
கோடெடுத்து மாரிகாத்த  குடைபிடித்து மாக்கள்வா  
ணாடிழந்த வன்பரன்பு தூதனான மாயவன்
றேடிவந்து பத்தரின்ன றீர்த்துவுப்ப னையமே
#கலிவிருத்தம்

 

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

எட்டெழுத்து கலி விருத்தம்

எட்டெழுத்து நித்தமோதி யிட்டமான பூசைசெய்

விட்டுபத்தர் வேதமோதி செய்துவந்த மஞ்சனம்
 
பட்டுடுத்து போதுமாது தொட்டணைத்த கோலமா
 
கட்டவாக்க விச்வரூப சிங்கவேளின் காட்சியே
 
 

யோகமூர்த்தி கலி விருத்தம்

 

யோகமூர்த்தி கையிலேந்து மம்புவில்லுஞ் சக்கரம்
போகமூர்த்தி திருவணைத்த புன்சிரிப்பு மூன்றுகண்
நாகமூர்த்தி குடைபிடிக்கு நகைவிளங்கீ ராறுபல்
வேகமூர்த்தி பாலன்காத்த விசுவரூப சிம்மமே
 

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

துடியிடை மடமயில் விருத்தம்

 துடியிடை மடமயி லொருபாதி
     துகிலென வரிகரி கொளுமாதி
          சுருதியி னுரைபொரு டனைமேவி
               சுகமளி மதுமொழி யுறையாவி

யடலிடை வருவிட மிடறாகி
     யமுதென வுலகளி யொருயோகி
         யணிநுத லருவிழி யுடையோனே
             யரவணி மதிநதி சடையோனே

சுடரொளி விரிகதிர் சகடாக
     சுரரணி யனைவருந் துணையாக
          திரிபுர மெரிசெய விதுவேனோ
             சிறுநகை யதுதகு மிறைவோனே

துடியிடை யிருமொழி தருவோனே
     துதியுனை நனிசெய வடியேனை
          மதியமர்ந் தனிவழி தருவாயே
              கதிதரும் பசுபதி பெருமாளே  


பன்னிரு சீர் விருத்தம் 


வியாழன், 8 ஆகஸ்ட், 2024

நிலைக்கும் ஏழு ஞாலமும் கலி விருத்தம்

 

நிலைக்குமேழு ஞாலமு நினைப்பிலென்று நீங்கிலா

 லிலைக்கணீந்து பாலனி னிருப்பையென்று நீங்கிடா

வலைக்கணுற்ற தேவியுன் வளைக்கரங்கள் கண்டுநா
 
மலைப்பிலாழ நாளெலா மலர்க்கணின்றை போலுமே
 
 

ஆடிப் பூர வறுசீர் விருத்தம்

 ஆடிப் பூரத் தவதரித்து
     வாயர் பாடித் தனைநினைத்துக்
கூடத் தேவைப் பரிதவித்துக்
     கோலக் கோவைத் தமிழளித்து
நாடிப்  பாவை  நெறியறுத்து
      நாதர் தாள்சேர் வழிவகுத்து ச்
சூடித் தந்த சுடர்கொடியைப்
       பாடப் பார்க்கண் பிறந்துவந்தேமே

 

புதன், 7 ஆகஸ்ட், 2024

ஆடிப் பூர விருத்தம்

 

பூரத்திற் பூரித்துச் செகத்துதித்தாள்
பூவைக்கும் பூசைக்குப் புனைந்தளித்தாள்
சாரத்தில் வேதத்தைச் சிறந்தளித்தாள்
சாவில்லா வானாளப் பாவமைத்தாள்
காரொத்த வண்ணற்குத் தனையளித்தாள்
காணிக்கை யண்ணற்குக் கடனளித்தாள்
பாருக்கு வழிகாட்டப் பாவைசெய்தாள்
பாவிக்கு மொழிகாட்டுஞ் செகத்துதித்தாள்
#அறுசீர் விருத்தம்
 

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

பூவைவண்ணன் கலி விருத்தம்

பூவைவண்ணன் பூத்தொடுத்த பட்டர்பிரான் தோன்றலே
பாவைவண்ணப் பாத்தொடுத்த பாவையெங்கள் பாவையே
நாவைவண்ணஞ் சீரமைக்கு நாளுமுன்றன் பாடலே
கோவைவண்ணஞ் சீரமைத்த கோதையென்றும் வாழியே   

கலி விருத்தம் 

முக்கனியைச் சாறாக்கி வெண்பா

முக்கனியைச் சாறாக்கி முத்தமிழாய்ச் சீரமைத்த
முக்கணவன் மைந்தா முருகுருவே - தக்கவொரு
பாட்டிசைத்துத் தாள்பணியப் பார்த்தருள்வா யாழ்ப்பாணர்
மீட்டிசைக் கேற்ற விலக்கு

செவ்வாயிற் செவ்வேள் கலி விருத்தம்

இறையென் றுணர்வா ரிசைவைப் பெறுவார்
நிறையென் றுணர்வார் நினைவைப் பிரியார்
குறையென் றுறைவார்  குகனைத் துதியார்
முறையென் றுரைவா  முருகா வுனையே   

தலைபத்துதிர கலி விருத்தம்

தலைபத் துதிரக் கணைவிட் டவரா
மலையிற் றுயிலுந் திருமான் மருகா
நிலையற் றுழலும் விதிபற் றடியேன்
கலியைக் களையுங் கவிபற் றருளே 

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

திருவிலங்கை கலி விருத்தம்

திருவிலங்கை நோக்கழிக்கத்  திறனுடைத்த ளாயினுந்
திருவிலங்க னாதர்வந்து செருவிலங்கை வென்றிடத்
திருவிலங்கை யேற்றுவந்த பொறையுடைத்த தேவிநீ
திருவிலங்கை கருவிலங்கை யிருமைநீக்கி வீடளீ

திருவிலங்கை வெண்பா

திருவிலங்கை தீயத் திருவிலங்கை யேவித்
திருவிலங்கை நீக்கத் திருந்தா திருவிலங்கை
யின்றுபோய் நாளைவா வென்றுரைத்து வென்ற
திருவிலங்கை நாமமே தீர்வு
#வெண்பா

சனி, 3 ஆகஸ்ட், 2024

மண் கடந்து கலி விருத்தம்

மண்கடந்து விண்கடந்து கண்கடந்த மாணியா
யொண்கடந்தி ருள்கடந்து வெளிகலந்த வுள்ளுமாய்
திண்கடந்து நுண்கடந்து சித்தினோட சித்தூமா
யெண்கடந்த வீசவுன்னை யாவர்காண வல்லரே   

 

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...