வெள்ளி, 28 மார்ச், 2025

சித்தனாக விருத்தம்

சித்தனாக வித்தனாக முத்தனாக வேண்டுவோர்
      பத்திமார்க ஞானமார்க கர்ம்மார்க கொண்டுளோ
ரெத்தவங்க ளாளநிற்கு முத்தமர்கண் மேன்மையர்
       சத்தியங்க டத்துவங்கள் சாற்றிநின்ற வுன்னதர்
தொத்திநின்ற வூழறுக்கு முத்திதேடு மார்வலர்
      வித்திலாத வித்தைதேடு தத்துவர்கள் யோகிகண்
முத்துமாரி யாகிநின்ற மூலமான வுன்னையே
       யத்தனாக வம்மையாக வாசனாக யெண்வரே

 

சத்தியான கலிவிருத்தம்

சத்தியான சிவமுமான சத்தியத்தை நாடிடச்
சித்தியென்ன வித்தையென்ன தேர்ந்ததேடல் வேண்டுமோ
முத்தியென்ற யுத்திகாண மூலமான வன்னையைக்
கத்தியாளுங் குழந்தைபோன்ற கூவலொன்று போதுமே

 

சத்தியுமான கலித்துறை

சத்தியு மான சிவமு மான சிவகாமிதான்
பத்தியு மான ஞானமு மான பரமானந்தம்
முத்தியு மான வுத்தியு மான மூலமவள்
சத்திய மான சற்குரு வானாள் சகத்தினுக்கே

 

வியாழன், 27 மார்ச், 2025

அக்கரங்கள் கலி விருத்தம்

அக்கரங்க ளாறுசேர்த்துச் சொக்கநாதன் மைந்தனை
யிக்கரங்க ளொன்றுசேர்த்துத் தக்கநேர முள்ளவே
வக்கிரங்கொள் சிந்தைமாயக் குக்குடங்கொள் கொடியனி
னக்கரங்கள் காக்குநம்மை முக்கணங்க ளுறுதியே

 

விடையமர்ந்த கலி விருத்தம்

விடையமர்ந்த நங்கைபங்கன் சடையணிந்த வொன்றினை
யிடையணிந்த விளமைரூபன் றடையகற்ற வேண்டிபின்
மடைதிறந்த வெள்ளமாகக் கொடையளிக்கு மவற்கிளை
சடையகன்ற கோலமெண்ண விடைவிடாது வெற்றியே

 

அன்புடைத்த தாயவள்

அன்புடைத்த தாயவள்
அன்புடைத்த தூயவள்
ஆசைசேயின் றாயவள்
இன்பமீன்ற நேயவள்
ஈகையென்ற சொல்லிவள்
உம்பர்போற்று மூத்தவள்
ஊழகற்றுங் காற்றிவள்
என்பணிந்த கோலவள்
ஏழ்பிறப்புங் காப்பவள்
ஐந்தெழுத்து மானவள்
ஐங்கரற்குத் தாயவள்
ஒன்பதின்கண் வாழ்பவர்
ஓகபாதை சேர்ப்பவள்
ஔவையேத்து நாதருக்
கௌடதத்தை யீந்தவள்

புவனமேழும் ஆள்பவள் புவியமர்த்தி வைத்தனள்
சிவமுணர்ந்த சித்தரை நவமையாக வைப்பவள்
அவமகற்றி வாழ்விலே யமுதமாக்கு மூலவள்
உவமையற்ற அன்னையை உள்வதன்றி வேலையே

 

செவ்வாய், 25 மார்ச், 2025

ஆறக்கரத்தான் செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

ஆறக் கரத்தா னழகிற் றினமாழ்வோர்க் காறக் கரத்தா னருள்வனன்றோ - நூறக் கரத்தான் மலைவீழ வேலெறிந்த வாறு சிரத்தா னனவரதஞ் சீர்

 

ஆறக் கரத்தான் வெண்பா

ஆறக் கரத்தருவா னாறக் கரத்தருவா
னாறக் கரத்தருவா னாறுதித்தா - னாரக்
கரத்தருவா ளாரக் கரத்தருவா ளாரக்
கரத்தருள்வா ளாரக் கருத்து

 

இராமர் முருகர் சாழல்

இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இது முருகர் என்று தமது கருத்தை முன்வைக்குமாறு அமைந்த சாழல் பாடல்கள் பின்வருமாறு

 


படம்

 

திங்கள், 24 மார்ச், 2025

ஆற்றல் வடிவினள் விருத்தம்

ஆற்றல் வடிவின ளழகி னழகே 

        யான்ம வுயர்வினை யருளு மமுதே
 

போற்றல் வடிவினள் புதிதின் புதிதே 

          போக்காய்த் துணைவரும் புருவத் தொளியே
 

கூற்றின் வடிவினள் கடைவா யடக்குங் 

         குறையா வெளிபடர் கருமைக் கடலே
 

மாற்றல் வடிவினள் மனவிற் கரளே 

        மாறா நிலைபெறும் புவனேஸ் வரியே

ஞாயிறு, 23 மார்ச், 2025

காமனை வெண்பா

காமனை யாகுங் கடினத்தி னூற்றுக்கண்
காமனை விட்டொழிக்கக் காமனை கையாமோ
காமனை காமாட்சி யென்றிருத்தல் கைவல்ய
நாமடைய நல்ல வழி

 

மன்றிலாடு கலி விருத்தம்

மன்றிலாடு நாதர்வாம பாகளென்ப தன்றியு
முன்றவர்க்குத் தாயுமான மூப்பிலாத தத்துவங்
குன்றமர்ந்த வேங்கடர்க்கு முந்துசத்தி யானநீ
யன்றுமின்று மென்றுநிற்கு மாதிதேவி யல்லையே

வெள்ளி, 21 மார்ச், 2025

ஞான்சத்தி (முருகன் 16 கோலங்கள்)

ஞானசத்தி வேண்டுவோர் ஞானசத்தி தரனையும்
கார்யசித்தி வேண்டுவோர் கந்தசாமி வடிவையும்
வினைகளோட விரும்புவோர் சுப்ரமண்ய உருவையும்
கடினமோட விரும்புவோர் கஜமமர்ந்த நாதரும்

சௌக்கியங்கள் வேண்டுவோர் கார்த்திகேய கோலமும்
மாயைவீய விரும்புவோர் தாரகாரி கோலமும்
மணமுடிக்க நாடுவோர் வள்ளிநாதன் கோலமும்
மகிழ்விருக்க வேண்டுவோர் மயிலமர்ந்த கோலமும்

பகைதகர்க்க வேண்டுவோர் சேனானி கோலமும்
பழுதறுக்க அங்கமேவு பாலசாமி கோலமும்
மங்கலங்கள் வேண்டுவோர் தேவசேனை பதியையும்
சரவணத்தி லுத்பவிக்குஞ் சத்திமைந்தன் தன்னையும்

ஆணவத்தை வற்றசெய் குமாரசாமி திருவையும்
ஆளநிற்குந் துன்பநீங்க க்ரரௌஞ்ச பேதனரையும்
பாடுபட்டுக் கலைவளர்க்கப் பிரம்மசாத்தன் திருவையும்
பார்வதியை வணங்கநின்ற பலனனைத்து நாம்பெற

ஷண்முகத் திறைவிமைந்தன் பார்வைபற்றி நாளுமே
ஒண்முகத்து முருகனுக்கு உடல்கலந்த ஆவியை
வன்மநீக்கி பூசைசெய்ய யாவுகிட்ட லாகுமே
பன்முகத்து வாழ்வுவாழ பாதைவேறு முள்ளதோ

அயனுமான விருத்தம் (அந்தாதி)

1.

அயனுமான வரனுமான வரியுமான தத்துவம் 

பயனுமான பணிவுமான பதியுமான தத்துவஞ்

சயனமாளுங் கடலைவிட்டுச் சரியமைக்கப் பாரினை

நயனமான நவமிநாத னவின்றுரைக்க வுரியனே

 

வியாழன், 20 மார்ச், 2025

மும்முலை உடையாள் விருத்தம்

 மும்முலை யுடையாண் முழுமதி வடிவாள்

      முருகுரு குறையா முடவிலி யிளையாள்  விடையேறுஞ்

 

செம்மலி னிடமாய்த் திருவொடு திகழ்வா

     டுடியிடை மடவா டுயரிடர் களைவா ளிருகாதின்

 

கம்மலின் வடிவாய்க் கதிர்மதி யுடையாள்

      கடைவிழி யழகாற் கதிதரு முறையாள்  விரைசாந்தா

 

ரம்மலை யுடையா ளயிறர பெறுவா

      யமரினி லொளிர்வா யறுமுக விளையார் பெருமாளே 


தாயுள்ளம் விருத்தம்

 தாயுள்ளம் பெருங்கருணை தேடிவரந் தந்திடுவான்
    றாகமென வொருபோதும் போகவிடான் கண்டாயோ
சேயுள்ள மரும்பெருமை நாடிந்து மகிழ்விப்பான்
     றீந்தமிழை யினிப்பெனவே தித்திக்க நமக்களிப்பான்
காயுள்ளங் கொடும்பகைவர் கணப்பொழுதில் வென்றிடுவான்
     கருணைமிகுங் கடலிவனால் கொல்லாம லாட்கொள்வா
னீயுள்ள மளவில்லை யீன்றவளை யொத்தவனா
      மிவன்சாயன் மொத்தமுமுன் பிரதிபிம்ப முமையம்மே 


காமாட்சி குறள்வெண்செந்துறை

1.பதிசேவை புரிபாவை விதிசேத மண்டாது

மதிசூடு மாதேவன் கதிசேருங் காமாட்சி 

 

2.காமாட்சி பெயர்சொல்லி நாமாட்சி நாம்பெறுவோ

மேமாற்ற நமக்கில்லை சீமாட்டி சிரிப்புளதே

 

 3.உளமெங்கு மூற்றெடுக்கும் வளமான சொற்களினால்

விலையுயர்ந்த மாலையது பலகாலம் புனைவோமே

 

 4.புனைவேடம் பலவுடையா ணினைவெல்லா நகைத்திடுவா

டனைவேண்ட வருடந்தாண் முனைவேது மில்லாமல்

 

5.இல்லாத நிலையென்று மில்லாம லாக்கிடுவாள்

கல்லாலி னிழலமரு மில்லாளின் கருணையிது

 

6.இதுகாறுங் காணாத மதிஞான மளித்திடுவாள்

கதிசேரக் காமாட்சி துதிபாட விழைவோமே

 

7.விழைவேது வேண்டிலமே விழைவாக நீவருவாய்

மழைவேண்டி மரங்ளலெல்லா மழைவேதுந் தருவதில்லை

 

8.தில்லைக்கு மேலான வெல்லையிருங் காமாட்சி

வில்லேந்தும் புருவத்தாள் புல்லாக்குஞ் செப்புமதோ

 

 9.அதோமுகக் கருணைத்தே இதோவென வீன்றிவளாம்

சதாசிவ நாயகனுஞ் சதாவிவள் சேவையிலே

 

 10.சேவையிலே கரைகண்டு தேவையெல்லா மிவளாக்கி

யாவியிவட் கர்ப்பணிக்க மேவிடுவோங் கச்சிபதி

 

புதன், 19 மார்ச், 2025

சத்திபாணி விருத்தம்

சத்திபாணி சாத்திநின்ற சாந்தமான கோலமோ
       முத்திபாணி வாய்த்தளிக்கு முறுவலேந்து கோலமோ
            யத்திநாதன் மணமுடித்த கெட்டிமேளக் கோலமோ
               சித்தனாகத் தண்டமேந்து சித்தமாளு கோலமோ

மொத்ததேவர் போற்றிநின்ற வெற்றிமூளு கோலமோ
      வித்தையாளு மௌநாதர் கேட்டுவந்த கோலமோ
           பத்தியாலுன் புகுழுரைப்ப நீரசித்த கோலமோ
               புத்திகூர்மை மீதளிப்ப ப்ரம்மசாரி கோலமோ
 

சித்தசுத்த மோங்கிவார்க்கு மக்னிஜாத கோலமோ
       தத்துவத்தை வலியுறுத்து மயிலமர்ந்த கோலமோ
          கத்திபோல மலமகற்றுங் க்ரௌஞ்சதாரி கோலமோ
             சத்தமின்றி யொளிந்துநிற்குங் குகனதான கோலமோ
 

தொத்தநின்ற வினையகற்றுங் கங்கைமந்த கோலமோ
      சத்துசித்து மகிழ்வுமொன்றுஞ் சோமஸ்கந்த கோலமோ
         கொத்துவேட குலவிளக்கு வள்ளிநாத கோலமோ
            வித்தகாவுன் வாஞ்சைசொல்ல சத்தியங்க ளேங்குமே 

பரத்தை வெண்பா

 

பரத்தை யடைய வழிபகர்வோன் பாதஞ்
சிரத்தை சிதையாது பற்ற - வரத்தைக்
கொடுத்தாக வேண்டுங் குறைவின்றி யீசன்
றடுத்தாட்கொண் டான்ற பதம்

மராமரம் வெண்பா (அயோத்தி)

 

மராமர மேழழித்தான் மாயமான் மாய்த்தான்
பராபர னென்றாலும் பாரிற் - சராசரி
மாந்தனைப் போனடித்தான் மாதிருவர் சிந்தைதொடான்
வாழ்ந்ததிரு மண்மிதித்தாற் பேறு
 

கந்தா (செவ்வாயிற் செவ்வேள்)

கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகை மைந்தா வடிவழகின் மாற்றுருவே - செந்தாட் டிருமா றிருமருகா தீதொழித்துச் செம்மை யுருவா யுயிரை யுயர்த்து

 

செவ்வாய், 18 மார்ச், 2025

மலைமகள் விருத்தம்

 மலைமகள் பார்வதி கலைமகள் வாணியொ 

  டலைமகள் லக்‌ஷ்மியு மேவுடனாய்

அலைகடன் மாதவ னனமமர் நான்முகன் 

பிறையணி நாதனுங் கூடியுனை 

நிலைகெட தானவர் நிலையுற வானவர் 

மயிலமர் வேலெறி சண்முகனே 

மலைதனில் வீற்றிருங் குறமகள் கோவுனை 

மனமுகந் தேத்துவர் வாழியவே

திங்கள், 17 மார்ச், 2025

காமாக்‌ஷி திருவிருக்குக் குறள்


காம வக்‌ஷியி னாமஞ் செப்பவே
ஏம வைகலுஞ் சேம நல்குமே
கச்சி மாநக ரிச்சை கண்ணியின்
கச்சைக் காணவே யிச்சை வேகுமே
அஞ்சு பாணமு மஞ்ச லத்தமுந்
தஞ்ச மென்றிர வஞ்ச மில்லையே
ஞால மாளுவாள் கோல மாழவே
தூல மேனியும் வால மாகுமே
செய்ய மேனியண் மைய விழிகளை
உய்ய வழியெனச் செய்ய விழைமினே
தாயு மானவள் தூய பாதமே
வேய வினைகளை மாய வைக்குமே
மூவர் போற்றிடுந் தாவிஃ றேவியின்
கோவில் காணவே யாவி மாறுமே
(தா இல் தேவி - குற்றமற்றள்)
மாதுளைக் கொடி தாது போன்றவள்
பாதுகை தொழ வீதி வருமினே
ஐவருய்யவே மெய்வருத்திய
தெய்வ யிளைதர வுய்வு மரியதே ?
கந்தனம்மையை வந்தனைசெய
முந்துவினையற நந்து வீடுமே
அழிவி லாதவோ ரழகு குமரியைத்
தொழுது போற்றிடு மழகன் மொழிகளே
 

ஞாயிறு, 16 மார்ச், 2025

நேமி திருவிருக்குக் குறள்(நைமிசாரண்யம்)


1.நேமி கானமே நேமி நாதனின்
வாம ரூபமாய்ச் சேம நல்குமே

2.சங்கை யேத்தியே துங்க பாசுர
மங்கை மன்னன்சொல் லங்கந் தொழுமினே

3,அட்ட வெழுத்துடை யட்டக் கரத்துடை
வட்ட சக்கர னிட்டை கொண்மினே

4.கானை மேவிய மானை வேண்டிய
கோனை நாளுமே பேணு மூரிதே

5.என்பளித்தவன் பண்பை யேத்தியே
யின்ப வான்றரு மன்ப னிறைவனே

6.வ்யாச ருரைத்தநஃ றேசு மொழிகளை
ச்வாச மென்றிரு நேச வூரிதே

7.தேவ ராஜனாய்ச் சேவை தந்திடு
மேவு மாயனி னேவல் செய்மினே

8.பாழு கலியினில் வீழப் பழவினை
யாழி கானமே வாழு மிறையுரு

9.சிதய சதிவுட லிதய முதிருமோர்
பதியின் கதிபெற விதியுஞ் சிதையுமே

10.சத்தி நிலமிது பத்தி நிலமிது
சித்த மாகுமே முத்தி நிலைகளே

11.நேமி காடுறை வாம விறையின்மே
னாமன் சுந்தரன் வாய்மை மொழிகளே


செவ்வாய், 11 மார்ச், 2025

நீர்மலி கட்டளைக் கலித்துறை

நீர்மலி வேணிய னெற்றி விழித்த நெருப்புப்பொறி
சீர்மலி கங்கையைச் சேர்ந்து  குளிரச் சரவணனாய்ப்
போர்மலி சூரணி போழ்தற வேலெறி புங்கவனாந்
தார்மலி சண்முகன் சார்வெமக் கென்று மடைக்கலமே 

காரணம் ஆசிரியப்பா

 

காரண மின்றிக் காரிய மில்லை
யேரண மின்றிச் செம்மொழி யில்லை
வாரிதி யின்றி வான்மழை யில்லை
தூரிகை யின்றி யோவிய மில்லை
காரிகை யின்றிக் காதல ரில்லை
தோரண மின்றித் திருவிழ வில்லை
பூரக மின்றி ரேசக மில்லை
தாரணை யின்றிச் சமாதி யில்லை
நாரிக ளின்றி நளினமு மில்லை
யாரண மோர்ந்தார் மொழிவர்
நாரண னின்றி வீடுற லிலையே
 

திங்கள், 10 மார்ச், 2025

உள்ளத்து வெண்பா

உள்ளத் துருகி யுனதடியா ரேத்தவுனை
வெள்ளப் பெருக்காய் விரைந்துவரும்- வெள்ளி
விடையேறும் வெண்காடர் பாதி யுருவே
யடைவுன்னை விட்டா லெவர்

 

மண்ணாளும் கலி விருத்தம்

மண்ணாளு மன்னர் வணங்குவது முன்னையே
பெண்ணாளும் பாகர்க்கும் பேறான தேவியே
விண்ணாளும் வைகுந்தர் வாழ்த்துவது முன்னையே
கண்ணாளுங் காமாட்சிக் கீடாரு முள்ளாரோ

ராமனாக

ராமனாகக் காக்கவும் ராமனாகப் போக்கவும் ராமனாகப் பார்க்கவும் வாமனாகக் கேட்கவு நாமனாகக் கொல்லவுந் தாமமாகங் கட்டவு மாமையாகத் தாங்கவு மீனமாகக் காட்டவு
மேனமாகத் தூக்கவு மிங்குவந்த தேவனே ஞானமாக நாளுமு னாமமாளக் கேட்கிறோம் வானமாளுஞ் சூரிகள் வையநின்று சொன்னவை யூனமான நாமுய வோங்குபாதை காட்டுமே 
 

கேடுகெட்ட

கேடுகெட்ட வுலகிதென்று கல்லெறிந்து தூற்றலாம் பாடுபட்டு முன்செலற்கு முயன்றுமேன்மை காணலா நாடுவிட்டு நாடுசென்று மூழழிந்து போகுமோ வீடுபெற்று வாழ்வொடுங்க வீசனாமஞ் சொன்மினே

 

தூமதியும் வெண்பா

தூமதியும் பேரனபுந் தொய்வில்லா வாற்றலு மாமலரா ளம்சமாய் மண்ணுற்ற - ஸ்ரீமதியை எந்நாளும் போற்றி யியைவதனாற் பெண்ணாளு மிந்நாளு மென்றும்போ றான்

 

வியாழன், 6 மார்ச், 2025

மனக்கவலை வெண்பா

மனக்கவலை நீக்கு மதிச்சுடரை யேற்று மினம்புரியா வின்ப மருளுந் - தினந்தொழவே மாற்றி யமைத்து வடிவாக்கு மாந்தனை மாற்றிலா மான்மருகன் வேல்

 

அருட்சத்தி கலிவிருத்தம்

 அருட்சத்தி யவளே யனைத்துலகு மவளே

பொருட்சத்தி யவளே போகுமிட மவளே

மருட்சத்தி வடிவாய் மயக்குவளு மவளே

தெருட்சத்தி யீவா டிளைத்திருப் போமே  

காதலென்றும் கலி விருத்தம்

 காதெலென்றுங் கன்னியென்றுங் கண்டுநாளும் போற்றுவீர்

மோதலென்று மோகமென்று மாறிமாறிச் சுற்றுவீர்

தீதலென்றுங் குளிர்தலென்றுந் திக்கிலா துழல்கிறீர்

வாழ்தெலென்று, வீழ்தலென்றுங் காதலாகுமா சொலே  

 

சீறுமாறு கலி விருத்தம்

 சீறுமாறு சடையணிந்த சந்த்ரசேக ரங்கமே
வாறுகூறு தாண்டிவந்து மாலைசூடு மங்கையா
யேறுமாறி யோகிகட்குங் கூறொணாத கூறெனக்
காறுமாறு நீயிருக்க வார்ப்பரிப்ப தில்லையே

அறியாமையின் கலி விருத்தம்


அறியாமையி னறியாமையை யறியாவண மறைத்தைம்
பொறியாடிடும் வெறியாடலைப் புரியாவணம் வளர்த்து
வறியேனுயிர் துயராழ்வதை யரியாதிர லழகோ
சிறைவாழ்விதை விடியாயுடன் சிவகாமியெ சரணே 

புதன், 5 மார்ச், 2025

காமாட்சி வெண்பா

காமாட்சி காமாட்சி போக்குங் கொடும்பாவ
நேமநிட்டை பார்க்க நியதியில்லை - நாமாட்சி
கைவல்யம் யாவுநல்குங் கண்டுணர்ந்து மெய்யான
வுய்வழியை யோயா துரை 


கலங்காதே வெண்பா

கலங்காதே கந்தர்கை வேறோன்றிக் காக்கு
மலங்களைந்து மாண்பளிக்கு மன்ன - வலங்கறந்து
பூசனை செய்யாது போனாலுந் தாழ்வில்லை
வாசனை வாய்மொழியும் பாட்டு
 


மால்வரை ஆசிரியப்பா

 மால்வரை மகளின் மகனி னுயர்வை
யார்வரை யறுக்கக் கூடுங் கரிமுக
சத்தியினு யர்வைத் தத்துவ முடிபைப்
பத்திரப் படுத்தப் பாது காக்க
நித்திய வாழ்வின் குறைக ளண்டா
நிஜத்தை நீர்க்கச் செய்யா
துயிரென வோம்பு மொருபல் லோனே

செவ்வாய், 4 மார்ச், 2025

செங்காந்தட் சிறுபாலன்

செங்காந்தட் சிறுபாலன் சிவவடிவி னுதித்தவனாந் தின்றாலு மோயாத தீர்பசியின் வயிறுடையா னங்காள வீஸ்வரியி னழகிடையி லணியமர்ந்தா னைந்தழகு கரமுடையா னையையுமை யுருவுடைத்தான் சிங்கார மடந்தையுடன் சிவநடத்து லீலைகளே சிருட்டியின் வித்தாகுந் தத்துவ மென்றுணர வெங்கெங்கு காணினும் விளங்கு மிருத்தலு மாற்றலு மிணைபிரியா வொன்றே

 

ஆழியான் பாலது விருத்தம்

 

ஆழியான் பாலது அன்புளங் கொண்டதால் மாயமா யாகினாயோ 
ஆணிவே ரானநீ ஆலிலை பாலகன் ஆணையால் தூங்கினாயோ
 
ஊழிசேர் ஊழினை உற்றவன் என்பதால் உன்னளி மூடினாயோ 
ஓகமோ யாகமோ ஒன்றுமே அறிகிலேன் என்பதால் வாடினாயோ
 
பாழிலே வாழ்வெலாம் பண்டுநாள் விற்றதால் பாவிமேல் கோவந்தானோ 
பங்கயப் பாவையைப் பாடியே என்குறை இன்றுநான் தீர்க்கலாமோ
 
ஆழிசூழ் பூவிலே ஆவுறுந் துன்பினை யன்னையே பொறுக்கலாமோ 
ஆறுமா றாகநீ அன்புளங் கொண்டுவா நேரிலா ஸ்ரீதேவியே
 

கண்ணின்ற கலிவிருத்தம்

கண்ணின்ற கைவல்யங் காமாட்சி கண்ணசைவா
மண்ணின்ற மாதர்க்கு மாண்பளித் தேத்திடுவோம்
விண்ணின்ற தேவரும் வாழ்த்தி மேன்மையுற
வுண்ணின்ற வொண்டொடியா ளோங்குவிப் பாளே 

பெண்ணென்று வெண்பா

பெண்ணென்று வந்தாய்ப் பிணியறுக்கப் பூதலத்தி
லுண்ணின்ற வுன்னை யுணர்வார்யார் - மண்ணின்ற
வன்னை யுனதுருவா யாக்கினா யென்றுணர்ந்தோ
மென்னே யிறைவியுன் னன்பு

காலமற்ற கலிவிருத்தம்

காலமற்ற வெளியினிற்குங் கந்தனென்னுந் தத்துவம்
ஞாலமேழு மாளுகின்ற ஞானதண்ட பாணியாய்க்
கோலவேட வாண்டியாக குன்றுநின்று பழநிமேல்
போலவொன்று சொல்லொணாத பூதலித்தி னின்றதே 

திங்கள், 3 மார்ச், 2025

மண்கடந்த வெண்பா

மண்கடந்த விண்கடந்த மாமாயை யென்றாலென்
றண்கடம்ப கான்வசிப்பா டாயன்றோ - கண்கலங்கிச்
சேவிக்குஞ் சேய்க்குத் திருவரு டேர்ந்தருளுந்
தேவி சரண்யா சிவா

 

ஆழிதோன்றி விருத்தம்


ஆழிதோன்றி மாலைசூடி யாழியானைக் கொண்டனை
    யண்டர்கோனு முன்னைவேண்டி யட்டகத்தை யேத்திடப்
பாழிலாழும் லோகம்யாவும் பங்கயத்துப் பாவையுன்
    பார்வைநாடி யேங்கிநிற்கப் புன்சிரித்த கோலமாய்
நாழிகாத்து நன்மைசெய்யு நாரணன்றன் காலடி
     நாகமெத்தை பாங்கமர்ந்து சேவைசெய்யுந் தேவிநீ    
யூழியூழி தாண்டிநிற்கு முத்தமன்றன் பாதியால்
     வாழிவாழி யென்றும்வாழி யென்றுவாழ்த்த வேற்றளே

 

நீறுமொன்று கலிவிருத்தம்

 நீறுமொன்று மண்ணுமொன்று நேயநன்று வந்தபி

னாறுமொன்று வாற்றலொன்று வன்புணர்ந்து கொண்டபின்

கூறுமொன்று சிந்தையொன்று குற்றமில்லை யென்றபின்

மீறுமொன்று வாழ்விலெங்கு மீனள்பாதங் காக்குமே 

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி