சனி, 28 பிப்ரவரி, 2026

குழலூது சிந்தியல் வெண்பா

குழலூது காதலன் தோள்சாய்ந்து கொண்டு

விழைவேது மின்றி மிளிர்வாட் குழலா 

தொடுங்குலகு மொப்போ வுரை

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

மங்கைக்கு இடம் தந்து நேரிசை சிந்தியல் வெண்பா

 மங்கைக் கிடந்தந்து மானைக் கரங்கொண்டு 

கங்கைக் களித்த கதியதனா - லங்கை

யரிக்கொப்பான் கார்மிடற் றான் 


இடைவிடா சிந்தியல் வெண்பா

இடைவிடா தேக்க நிலைமறக்கு மேதங்  

கொடையென்பர் கொண்டார் குறிப்பிற் - கடைகாணிற் 

காதல் கடவுளுக் கொப்பு

உரலோடு ஒடுங்க நேரிசை சிந்தியல் வெண்பா

உரலோ டொடுங்க வுடன்படுவான் குன்றை

விரலோ டெடுத்த விறலான் - கருவங்

கடந்தன் பளிப்பவர் கட்கு


வியாழன், 26 பிப்ரவரி, 2026

வந்த வினையும் கட்டளைக் கலித்துறை

வந்த வினையும் வருகின் றவினையும் வீசியெறி 

முந்து விரையு முகட்டைப் பிளக்கு முதுவுலகி 

னுந்தி சுவற வுருமா வழிய வுமைபரிசாய்த்

தந்த வயில்வேற் சரவணன் றாளே சரணெமக்கே  


அகத்தடைவு நேரிசை சிந்தியல் வெண்பா

 அகத்தடை வின்ப மருளினா னீச

னிகத்தடைந் தெட்டி நிறைவைப்- பகர்க்கரிய

பாதைப் பரத்தடையப் பின்பு  

இருளகற்று வெண்பா

 இருளகற்று ஞானத்  திளங்கதிரா கேட்ட 

பொருளளிக்குந் தீராப்  புகழ்மரமா நீங்கா 

தருள்சுரக்கும் வற்றா வமுதே - மருளாளு

மாந்தரக வாழ்வோ மறைப்பு


நாத்தழும்பு நேரிசை சிந்தியல் வெண்பா

 நாத்தழும் பேற நவில்வே னுனநாமஞ் 

சேர்த்தாள் சிறியனையுஞ் சீர்பாதங் - கார்த்திகைக் 

கன்னிவளர் கந்தா கனிந்து  


புதன், 25 பிப்ரவரி, 2026

பூச்சுடி வெண்பா

பூச்சுடி யையளித்தாள் பொய்யண்டா மெய்யழகி 

னாச்சியா ணல்ல தமிழ்ப்பாவை - யாய்ச்சியா 

யான்றுரைத்தா ளாண்டா ளெமை


பால வடிவினன் சிந்தியல் நேரிசை வெண்பா

பால வடிவினன் பாங்க ளிளமகன் 

கோல மயிலினன் கூர்வேலன் மூலன்

முருகன்சொன் மூவா மறை


திங்கள், 23 பிப்ரவரி, 2026

இன்றுனதாள் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

இன்றுனதாள் போற்றி யியற்றமிழா லேத்தற்குச்

சென்றபிறப் பாற்றிய சீரென்னே செவ்வேளே

கொன்றையணி கூத்தற்கு மாசானே  நன்றிசொல 

நாடவறா  தாசை யளி 


விழிமறைக்கும் வெண்பா

 விழிமறைக்குங் கைகள் விழைவொடுக்க லாமோ

வழைவனுப்புங் காந்த ளிதழ்கரக்க லாமோ

மழைகொடுக்கும் வானத்தை வேண்டாச் செழிவடக்குஞ்

செம்புலந் தேரினுமுண் டோ 

கடலாழம் வெண்பா

கடலாழஞ் சென்று கடலாடைக் கன்னிக் 

கிடரேது மின்றி யெயிற்றா லெடுத்து

விடலாமோ வென்முன் விழிக ணடமாடி 

நாணுவதே காத னயம் 


தாய்தந்த வெண்பா

தாய்தந்த வேல்வாங்கித் தாரக சூரணிக்கு

மாய்தந்த வள்ளி மணாளன் முகமாறின்

சேய்தந்த செந்தமிழைச் சீர்பயில வாய்தந்த 

வாழ்வின்கண் வாரா தயர்வு 


ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

மாளாது வெண்பா

மாளாது  மாதவன் மாதர்க்குத் தீமைசெயுங்  

கேளாது கேசவன் கேளிர்க்குக் கேடழிக்கு

மூளாத மெய்வினையு மூழ்கவே - யாளா

யவற்கடிமை செய்த லணி

சனி, 21 பிப்ரவரி, 2026

ஐயற்கும் ஆசான் வெண்பா

 ஐயற்கு மாசானாய் நிற்கு மழகுருவிற்

பொய்யர்க்குச் சற்றும் புலப்படான் பற்றறுத்த

மெய்யர்க்கே மெய்வீட்டின் பேறருள்வான் - வையர்க்கும்

வானோர்க்கும் வாழ்வளித்த கோ 


வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

மூன்று தமிழ் வெண்பா

மூன்றுதமிழ் வித்தகன் மூப்பறியா வேலவனெஞ் 

ஞான்றுமுறை நாயக னுள்ள நயந்தருள 

யான்றமிழா லேத்துவது மென்று  

அறுசமயம் குறள் வெண்பா

அறுசமய மாறானான் மாயோ னுறுசமய மோங்குகட லீறென் றறி

காலற்கும் காலனே சிந்தியல் வெண்பா

காலற்குங் காலனே மாலே மணிவண்ணா

சேலாளுங் கண்ணி சிறுத்தாம்பிற் கட்டுண்டாய்

மேலாமோ அன்பின் வலி

வியாழன், 19 பிப்ரவரி, 2026

வேலுருவாய் வெண்பா (சிந்தியல் இன்னிசை)

 வேலுருவாய்க் கந்தனிற்க மெய்வடிவாய்ச் சேவனிற்குங்

கோலமயி றண்ணளியாய்க் கோளறுக்கும் வாழியறத்

தாலமை மாற்றமிலா வாறு

வெற்றிசேர் வேல் இன்னிசைச் சிந்தியல் வெண்பா

 வெற்றிசேர் வேலும் விளையா டணிமயிலுங்

கொற்றக் கொடியாய குக்குடமுஞ் சிந்தைசெய 

நற்றுணையா நாத னருள்


காலனை சாடு நற் காலன் சிந்தியல் வெண்பா

காலனைச் சாடுநற் காலனைச் சித்தமா

மூலனை யாட்கொண்ட மூலனைச் - சூலைதீர்

சூலனைச் சொல்வதன்றோ சொல்


பாலனாய் நின்ற சிந்தியல் வெண்பா

 

பாலனாய் நின்ற பராசத்தி மைந்தனே 

யாலவா யண்ணற்கு மாசானாம் - வேலனாய்

ஞாலமீ டேவர்க்கு நல்கு


புதன், 18 பிப்ரவரி, 2026

கற்பனைக்கு எட்டா சிந்தியல் வெண்பா

கற்பனைக் கெட்டாக் கருவுரு கந்தன்றன் பொற்பதம் பற்றப் புனைகவிதை யாறனைய வற்பற்குந் தோன்று மகத்து

இணக்கம் என்று சிந்தியல் வெண்பா

 இணக்கமென் றென்று மியல்பினை விட்டுத்

தணிக்கவே சற்றும் பணியாதே யோம்பு 

குணக்கடல் கூறா யகம் 


கற்பனைக்கு எட்டா கரு உரு வெண்பா

கற்பனைக் கெட்டா கருவுருநீ ஞானத்தா லற்பனுக் கெட்டா தமைகுவையோ- சொற்பமுன்ற னின்னருள் சொட்ட விசைத்தமிழ் ஞானமெலாந் தன்னரு ளாகுந் தகை

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

எந்தை முருகனை சிந்தியல் வெண்பா

எந்தை முருகனை யேற்ற தமிழ்பாடிச் 

சிந்தைமகிழ் பூசைசெய்து சேர்வனே யூமையற்குஞ்

செந்தமிழ்ச் செப்பீத லான்


திங்கள், 16 பிப்ரவரி, 2026

மதிமயங்குதல் வெண்பா(அகம்)

மதிவா ணுதலு மலர்விழியுஞ் சற்று

முதிரா குழலு மொளிரெயிறுங் கொவ்வை

யிதழு யிளமுலையுங் காணா ரிழந்தார் 

மதிமருட்டு மிம்மா மயக்கு

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

மதிசூடு வெண்பா

 மதிசூடு மாதவனின் மாண்புணர்ந்து செய்ய

துதிசூடு சொன்மாலை சாற்ற - விதிசூழும்  

பாழ்வாழ்வின் பற்றகலு மிந்நாளி லுண்முகத்து

வாழ்வாய வீழு மயக்கு


காலால் வெண்பா

 காலாற் புவிவா னளந்தான் கதிதரு

மாலா லுயர்வார் மதிபெற்ற- நாலா
யிரம்பாடு நல்லாழ்வா ரேத்துதமிழ்ச் சொல்லே
வரம்பானால் வாழ்வாந் தலை

காலனை வெண்பா

 காலனைக் காலா லுதைத்தான் கதிதருநாள்

காலையு மாலையு நள்ளிரவுங் கண்விழித்

தாலவா யண்ணலி னந்தமிலாக் கீர்த்தியைச்

சாலவே யெண்ண றலை


வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

வில்லொன்று கொண்டான் வெண்பா

வில்லொன்று கொண்டான் வியனுலகின் மாந்தனாய்ச்

சொல்லொன்று கொண்டான் றுயரழிக்குந் தூயவளை

யில்லென்று கொண்டா னிலக்கடையு மம்பிளையா 

கொல்லாமற் கொல்லுமிக் கண் 

வியாழன், 12 பிப்ரவரி, 2026

மன்றாடி வெண்பா

மன்றாடி மைந்தனை மாமயில் வாகனனைக்

குன்றாடு கொற்றனைக் கோட்டுருவு வேலனைச் 

சென்றோடிச் சேவித்துஞ் சிந்தித்து முய்வனோ

வென்றாடி வெள்ளாமுன் யான் 


வினைப்பயன் வெண்பா

 வினைப்பயன் மாற்ற விழைவெனக் கில்லை

நினைத்ததி யாவு நிறைவேற வேண்டா

வுனைப்பய னென்றே யுணர்ச்சியை வெல்ல

முனைப்பினை யாண்முரு கா


அணிதிகழ் ஆழியும் வெண்பா

அணிதிக ழாழியு மார்ப்பரி சங்கும்

பணிதுயின் மேனியும் பற்பமலர்க் கண்ணு

மணிதிகழ் மார்பின் மலர்மகளுந் தூய  

குணந்திகழ் கோவின் குறி


புதன், 11 பிப்ரவரி, 2026

நிறைமதி நாண வெண்பா

நிறைமதி நாண நிறந்திகழ் சோலை

நறைமலர் நாண நடையார் - மறைமுனி 

யூர்தி யனநாண வோதத் துதித்தாஅண்

மார்திகழ வாஞ்சைமிகு மாற்கு 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

மதிபணி மின்ன வெண்பா

 மதிபணி மின்ன மலர்நதி மின்ன

விதிதலை யோடுவிரன் மின்ன - கதிதரு

காசி கனலொடு மின்ன விரந்தனன

ம்

மாசை யகற்ற விறை


அடிபணியும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 அடிபணியு மன்பர்க்குன் னன்பே யருளா

யடிபணியா வம்பர்க்கோ வஃதே - கடிவதுபோற்
றோற்றமுறு மென்றாலுந் தூவளியே மெய்ம்மைய

தாற்றுதித்த வாண்டவனே யன்பு

ஓயாதுனை நாளும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

ஓயா துனைநாளு முள்ளத்தி லுள்ளிநிற்கக்

காயாத காட்டங் கடிதேகுஞ் - சேயனாஞ்   

செவ்வாயின் செவ்வேளைச் செவ்வேளைச் செப்பற்கே

யிவ்வாழ்வை யீந்தா யிசைந்து


வஞ்சிக் கண் வைத்த மனம் வெண்பா

வஞ்சிக்கண் வைத்தமனம் வேறேது நாடாது

துஞ்சிக்கண் சாய்ந்தாலுந் தூங்காது - நஞ்சீதா

நல்லமுதா நாடவறா வாடவரை யாட்கொளுதே 

வெல்லமிது வேம்பைக் குழைத்து


விதிவிலக்கிட்டவன் மடக்கு வெண்பா

 விதிவிலக் கிட்டவன் வீற்றிரு குன்றிற்

பதிவிளக் கிட்டவன் பாங்கை - மதிநிறுத்தி 

வண்ணத் தமிழ்புனைந்த வாக்கிற் கொருகவியை

யெண்ணத் தமிழ்புலர்ந்த தே


திங்கள், 9 பிப்ரவரி, 2026

பகலவன் ஆக்கம் மடக்கு வெண்பா

பகலவ னாக்கம் பழுதிலி பார்வை 

புகலவ னாக்கம் புரைதீ - ரிகலவன்

வீழ விராமனு மேத்தவமர் வென்றியருள்  

வீழ விராமனு மாசு 


ஞாலத் தொருபொருள் வெண்பா

 ஞாலத் தொருபொருளை ஞானத் தடைமுடிவைச்

சீலத் தமிழ்பாடு செந்நாவாற் -காலத்
தொழியா வகையிசைக்க வல்லா ருளரோ
மழிசைப் பிரானிசைத்த வாறு

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

மண்ணாளும் மன்னர் வெண்பா

 மண்ணாளு மன்னற் கடிபணித னன்முறையோ

பண்ணாளும் பைந்தமிழ ரேற்பாரோ - பெண்ணாளும்

பாகத்தான் பைந்நாகத் தாழ்சடையான் றாளொன்றே 

தாகத்தார் சாற்றும் பணிவு


ஆறுபடை வீட்டு வேற்காப்புக் குறள் வெண்பாக்கள்

 

சீரலைவாய் காத்த சிவசுதன்வேல் பேரலைவாய்

    பீடழியாக் காப்பாங் கடைக்கு


புதன், 4 பிப்ரவரி, 2026

நேயத்தே நின்ற நிமலன் குறள் வெண்பாக்கள்

1நேயத்தே நின்ற நிமலனைக் காயத்தே

காண்பார்க்கு வீடா முலகு 


மறுமையின் மலர்ந்த காதல் வெண்பா

 உயிர்வலி நீக்கி யுளமகிழ் நாட்டுந்

துயரறக் காக்குஞ் சுடரா - முயர்வாம்
பொறுமையின்பு லர்ந்தநற் பூவொளி தேனாய்
மறுமையின்ம லர்ந்தகா தல்

கடலோர வெண்பா - பிரிவு

 கடலோரக் காற்றிற் கசிந்துவரு நீரா

யுடலுள்ளஞ் சிந்தை யுனதாய் - மடலேறப்
பார்த்து மறுத்தேன் மதிதழுவ வாராயோ
காத்திருக்கேன் கார்த்திகே யா

பழத்தின் பொருட்டுக் கட்டளைக் கலித்துறை - செவ்வாயிற் செவ்வேள்

 பழத்தின் பொருட்டுப் பழனி யமர்ந்த பரம்பொருளைக்

கிழத்தி னுருவிற் கெழீஇய நட்பின் கரம்பிடித்த
கழுத்தின் கறுத்தர் குருவாய்ச் செவியுரை யேரகனே
வழுத்தின் முறையே வழுவாத் தமிழ்செய் வகையளியே

அறம் குறள் வெண்பாக்கள்

அறத்தின் வழிநடந் தாற்றுஞ் செயலே

நிறைத்த வகத்தைத் தரும்


அகக்குறள் வெண்பாக்கள்

விழிமொழியு மேன்மை விழைந்துவந்தார்  வேண்டார்

மொழிமொழியு முற்றா முறை


நடைப்பயணம் ஈறுமுதலித் தொடை வெண்பாக்கள்

நடைப்பயண மேற்கொள்ள நல்லபயன் கிட்டு மிடைக்கொழுப்பு நீங்கு மிதமா - யடைப்பின்றிச் செங்குருதி யோடு மிதயஞ் சிறந்தியங்கு மங்கா தொளிரு மதி